தேவனுக்கே மகிமையுண்டாவதாக  

சங்கீதம்: 66:19

மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

எகிப்தின் ஒன்பதாவது வாதை இஸ்ரவேலை சீர்திருத்த தேவன் அனுப்பும் வாதை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் வெட்டுக்கிளியை தேவன் எகிப்தியர் நடுவில் அனுப்பியும், பின்னும் பார்வோன் இஸ்ரவேலை தேவனை ஆராதிக்க அனுப்பாமல் இருந்ததையும் நம் உள்ளத்தில் உள்ள துர்கிரியைகளினால் தேவன் வெட்டுகிளிகளை அனுப்பியதையும் ஆனால் திரளான ஜனங்களை வெட்டுகிளிகளை அனுப்பி சேதப்படுத்தியும் மக்கள் இன்னும் மனந்திரும்பாமற் இருக்கிறதை குறித்தும் தியானித்தோம்.

அதனால் தேவன் எகிப்தில் அடுத்த வாதையை அனுப்ப,

யாத்திராகமம்: 10:21-24

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக் கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார்.

மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசமெங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று.

மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.

அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

ஆனால் மோசே பார்வோனிடத்தில் அதற்கு சம்மதியாமல் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்க வேண்டும். ஒரு குளம்பாகிலும் பின் வைக்கப்படுவதில்லை. நாங்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்ய அவைகளிலிருந்து எடுக்க வேண்டும்.

ஆனால் இன்னதைக் கொண்டு செல்வோம் என்பது நாங்கள் அங்கே போய் சேருமளவும் எங்களுக்கு தெரியாது என்றான்.

மோசே பார்வோனிடத்தில் தேவனுக்கு மிருக ஜீவன்களை கொண்டுபோய் ஆராதனை செய்வோம். ஆனால் இன்னதை கொண்டு செய்வோம் என்பது அப்போது தான் தெரியும் என்று சொல்வது நமக்கு தேவன் காட்டுகிற மாதிரி.

பிரியமானவர்களே நாம் தேவனோடு உள்ள ஐக்கியத்தை வெளிப்படையாக அல்ல, நம்முடைய உள்ளான எண்ணங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அநேகர் பிறர் காணும்படி தேவனை தொழுது கொள்வார்கள். நம்முடைய ஆன்மீக வளர்ச்சி மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். நம் சினேகிதர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் நாம் உள்ளத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. அப்படி வெளிப்படுத்தி விட்டால் சத்துரு தந்திரமாக வலையை விரித்து விடுவான். அதனால் மோசே பார்வோனிடத்தில் ஞானமாக நடந்து கொள்கிறான்.

மேலும் கர்த்தர் காரிருளை ஒன்பதாவது வாதையாக எகிப்து தேசத்தில் அனுப்பினதை பார்க்கிறோம்.

இந்த காரிருள் தேவனுடைய பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது. கர்த்தர் மோசேயினிடத்தில் கையிலிருந்த கோலை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். அப்படி அவன் வானத்திற்கு நேராக நீட்டினான் அப்பொழுது எகிப்து தேசம் மட்டும் காரிருள் உண்டாயிற்று.

பிரியமானவர்களே இதிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது என்னவென்றால் இந்த காரிருள் என்னவெனில் கோல் வானத்திற்கு நேராக மோசே நீட்டுகிறான் என்றால் அந்த கோல் மேய்ப்பனிடம் வைக்கப்பட்டிருந்த கோல் அந்த மேய்ப்பன் தான் கிறிஸ்து. அந்த கோல் கிறிஸ்துவாகிய தேவனுடைய வார்த்தை இந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வரும் போது கீழ்ப்படியாதவர்களாகிய எகிப்தியருக்கு காரிருளாகவும் இஸ்ரவேலருக்கோ வெளிச்சமாயிருக்கும் அதனால் நம்மளில் எகிப்தின் செயல்பாடுகள் அத்தனையும் நம் வாழ்வில் மாற்றுகிறவர்களாக இருந்தால் காரிருள் நம் இருதயத்தை மூடாது. நம் தேசத்தையும் காரிருள் மூடாது. அதைத்தான்,

சங்கீதம்: 139:8-12

நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.

உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப் போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.

என்னவென்றால் நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடப்போமானால் நம்மை காரிருள் மூடாது. ஏனென்றால் காரிருள் அவருடைய பாதத்தின் கீழிருக்கும் என்று வேத வசனம் நமக்கு அழகாக எடுத்து காட்டுகிறது.

மேலும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு விரோதமாக வருகிற ஜாதி யாதென்றால் கோகு, கோகு கூட்டத்தார்,

எசேக்கியேல்: 38:8-12

அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்கலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது,

பெருங்காற்றைப் போல் எழும்பி வருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடே கூட இருக்கும் திரளான ஜனங்களும் கார் மேகம் போல் தேசத்தை மூடுவீர்கள்.

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,

உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,

நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின் மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.

பிரியமானவர்களே நீங்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியது. என்னவென்றால் இந்த ஜாதியை தேவன் எழுப்புகிறார். ஏனென்றால் இஸ்ரவேல் சபை நிர்விசாரமாய் சுக ஜீவியம் செய்து கொண்டிருப்பவர்கள் நடுவில் தேவன் எழுப்புகிறார். இவை எதற்கென்றால் அவர் பரிசுத்தர் என்பதை கோகு ஜாதி கூட்டத்தின் மூலம் விளங்கப்பண்ணும் படியாய் தேவன் கிரியை செய்கிறார். அதைத்தான்,

எசேக்கியேல்: 38:16

நீ தேசத்தைக் கார்மேகம் போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசிநாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன் மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என்தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.

பிரியமானவர்களே தேசத்தை கார்மேகம் மூடுவது போல் நம் வாழ்வில் இரட்சிப்பு இல்லாமலோ, இரட்சிப்பை காத்து கொள்ளாமல் இருந்தாலோ, இந்த கார்மேகம் நம் ஒவ்வொரு உள்ளத்தையும் அடைத்து விடும். அப்போது நம் உள் கண்கள் இருளடையும். நம் உள் கண் இருளடைந்தால் எந்த உண்மையான கிரியைகளாகிய தேவனுடைய செயல்களில் நாம் நடக்க முடியாது. ஆனால் அடுத்ததாக இவ்வித காரியம் நிகழ்வதற்கு ஏதுவாயிருக்கிறது, அதனால் நாம் சீக்கிரத்தில் இரட்சிப்பை பெற்று புது பெலன் அடைந்து எழுப்புவோம். கர்த்தர் நம் வாழ்க்கையில் பரிசுத்தர் என்று விளங்கி நாமும் பரிசுத்த பாதையில் நடப்போம். ஒப்புக் கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                     

-தொடர்ச்சி நாளை.