தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 69:16

கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

முதற்பேறானவராகிய இயேசு கிறிஸ்து நம் எல்லாருக்கும் முதற்பேறானவர்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் ஜனங்கள் மனந்திரும்பும் படியாகவும் பார்வோனின் இருதயத்தை தேவன் உடைக்கும் படியாகவும் எகிப்து தேசத்தில் காரிருள் அனுப்பினதை பார்க்கிறோம். அந்த காரிருள் மூன்று நாள் இருந்ததாகவும், பின்பு பார்வோன் மோசேயிடம் ஒப்புக்கொடுத்ததினால் மோசே தேவனிடத்தில் விண்ணப்பித்ததினால் தேவன் விண்ணப்பத்தை கேட்டார். பின்பு கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துகிறார். அவன் அவர்களை போக விட மனதில்லாதிருந்தான்.

பார்வோன் மோசேயிடம் என்னை விட்டு அப்பாலே போ;

நீ இனி என் முகத்தை காணாதபடி எச்சரிக்கையாயிரு நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான்.

அப்பொழுது மோசே நீ சொன்னது சரி; இனி நான் உன் முகத்தைக் காண்பதில்லை என்றான். இதனை நாம் தியானிக்கும் போது பார்வோன் மோசேயிடம் கோபத்தோடு பேசுகிறான். ஆனால் மோசேயுடைய வாயும், நாவும் தேவனுடைய வாயாகவும், நாவாகவும் தேவன் மாற்றினார் என்பதை முந்தின சில நாட்களுக்கு முன் தியானித்தோம். அப்படி தேவனுடைய வாயாக, நாவாக இருந்ததினால் மோசே சொல்கிறான். நீ சொல்வது சரி தான் இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

அப்படியே அடுத்து தேவன் அந்த வார்த்தையை தீவிரமாய் நிறைவேற்றுகிறார்.                                                                  

நம்முடைய உள்ளம் காரிருள் வருவது வாழ்க்கையில் வெளிச்சம் இல்லாத நிலைமை தேவன் காரிருளாகிய வாதையை நாம் முழுமையும் தேவனை ஏற்றுக் கொண்டவர்களாக ஒப்புக் கொடுக்கும் படியாக அனுப்புகிறார்.

மேலும் இஸ்ரவேல் மலையும் தேவனுக்கு பிரியமில்லாத ஆராதனை செய்வதினால் தேவன் ஜாதிகளின் தலைவனாகிய கோகை அனுப்புகிறார். அவர்கள் கார்மேகமாக தேசத்தை மூடின பிறகும் ஜனங்கள் மனந்திரும்பவில்லை என்று சொல்கிறதை பார்க்கிறோம். ஆனால்,

யாத்திராகமம்: 11:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின் மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.

இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.

அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்.

அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.

அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப் பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி,

அதினால் எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.

இவ்விதம் நடக்கும் போது இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தங்கள் நாவை அசைப்பதில்லை.

இவ்விதம் மோசே பார்வோனிடம் உம்முடைய ஊழியக்காரனாகிய இவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து என்னைப் பணிந்து கொண்டு நீங்கள் யாவரும் புறப்பட்டுப் போங்கள் என்று சொல்லுவார்கள். அதன் பின்பு புறப்பட்டு போவேன் என்று சொல்லி உக்கிரக் கோபத்தோடே பார்வோன் விட்டு புறப்பட்டான்.

கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியது எகிப்தில் அநேக அற்புதங்களைச் செய்யும் படியாகவும், பார்வோனையும் அவன் சேனையையும் மொத்தமாக அழிக்கும் படியாகவும் , இவ்விதம் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.

பிரியமானவர்களே;  பார்வோனின் இருதயம் கடினப்படுத்தி தேவன் தலைப்பிள்ளை சங்காரம் செய்யும் படியாக நோக்கம் உள்ளவராக காணப்படுகிறார். ஏனென்றால் முதற்பேறனைத்தையும் அழித்து ஜனங்களை ஆராதனைக்கு அனுப்பி  விடும் படியாக தேவன் திட்டம் பண்ணுகிறார். காரணமென்னவென்றால் இஸ்ரவேல் சபையாகிய அவருடைய சேஷ்ட புத்திரன் மீட்கப்பட்டு தேவனை ஆராதனை செய்யும் போது உள்ளத்தில் வேறு எந்த முதற்பேறு (முக்கியமானவைகளோ) இடம் இல்லை என்பதை கருத்தில் கொண்ட நம்முடைய தேவன் எகிப்தியரும் மற்றும் இஸ்ரவேலரும் தேவனுடைய வல்லமையை கண்டு உணர்ந்து கொள்ளும் படியாக அவருடைய நோக்கத்தை நிறைவேற்றி எடுக்கும் படியாக அத்தனை எகிப்தின் முதற்பேறும் சங்கரிப்பேன் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம். இதனை வாசித்து தியானிக்கிற தேவனுடைய ஜனமே,  உலகத்திலோ மற்றும் எந்த முதற்பேறோ,  பாரம்பரியமோ எந்த வித தோற்றங்களோ,  நம் உள்ளத்தில் முதன்மையான இடத்தில் இருக்கக்கூடாது என்பது தான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

நம்முடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நம் உள்ளமாகிய எகிப்தில் (பாரம்பரியம்) எல்லா துர் கிரியைகளை அழித்து நாம் யாவரும் முதற்பேறானவராகிய குமாரனை முதற்பேறானவராக நம் எல்லாருக்கும் தந்தருளும் படியாக தான் தேவன் எகிப்து தேசத்தில் பார்வோன் நடுவில் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். அவருடைய வார்த்தை தான் குமாரன் அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வரையிலும் வாதைகளும், கொள்ளைநோயும், பூமியதிர்ச்சியும், யுத்தங்களும் நம் உள்ளத்திலும், தேசங்களிலும் எழும்பிக் கொண்டிருக்கும். மனுஷன் மனந்திரும்பி பரலோக நாட்டை சொந்த தேசமாக்கும் படியாகத்தான் இவ்வித காரியங்களைச் செய்கிறார்.

ரோமர்: 8:29-32

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

இவைகளைக் குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

அதனால் பிரியமானவர்களே இனிமேலாவது தேவ கோபத்திற்கு நாம் இடம் கொடாத படி, நம் ஒவ்வொருவரும் பழையவையாகிய அத்தனை எகிப்தின் செயல்பாடுகளை விட்டு நம்முடைய தேவனுடைய சித்தத்தின்படி முதற்பேறானவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டும் நம் உள்ளம் கொடுப்போமானால் நமக்கு மற்ற எல்லாவற்றையும் அருளிச்செய்து ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                       

-தொடர்ச்சி நாளை.