பஸ்கா நியமித்தல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 23, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

I பேதுரு: 1:4

அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

பஸ்கா நியமித்தல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம்முடைய தேவன் எகிப்தின் நடுவே கடந்து போவேன்; அப்பொழுது எகிப்தில் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் எல்லோருடைய முதற்பேறனைத்தும் மற்றும் மிருகஜீவன்களின் தலையீற்று அனைத்தும் சாகும் என்று உரைத்ததை பார்த்தோம். இவை எதற்கெல்லாம் தேவன் செய்கிறார் என்று கழிந்த நாளில் நாம் தியானித்தோம்.

நம்முடைய உள்ளத்தில் முதற்பேறான கிறிஸ்துவை வரபண்ணும் படியாகவே தேவன் இவ்விதம் எகிப்தாக இருந்த உள்ளத்தில் அத்தனை தலைப்பிள்ளைகளும்,  முதன்மையாக நம் இருதயத்தில் வைத்த சகல காரியங்களையும் தேவன் தன் ஒரேபேறான குமாரனை அனுப்பி சங்கரிக்கிறார். இதனை எகிப்தின் நடுவில் நாம் நடக்க வேண்டிய வழியை தேவன் திருஷ்டாந்தப்படுகிறார் பின்பு கர்த்தர்,

யாத்திராகமம்: 12:1-3

கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.                                                                               

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.

அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

பிரியமானவர்களே நம் ஆத்தும இரட்சிப்பு எவ்வளவு அருமையானது என்பதை சிந்திக்க வேண்டும். பழைய ஏற்பாட்டின் பகுதியில் இஸ்ரவேல் புத்திரருக்கு கிடைக்காத பாக்கியம் இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிறார் என்பதை பழுதற்ற ஒரு ஆட்டுக் குட்டியை வைத்து தேவன் நமக்கு இஸ்ரவேல் ஜனங்கள் மூலம் திருஷ்டாந்தப்படுத்துகிறார். நம்முடைய தேவன் நம்மோடு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் புதிய உடன்படிக்கை உண்டு என்பதை முன் குறித்த நம்முடைய தேவன் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். அது சாயங்காலத்தில் அடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் தேவன் நமக்கு முத்திரை வைக்கிறார் என்றும் அப்போது சங்கார தூதன் நம்மை தொடுவதில்லை என்றும் நம் ஆத்துமா காக்கப்படும் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

மேலும் நாம் சுத்திகரிக்கப்பட்ட அன்று நாம் அவரோடு ஞானஸ்தான உடன்படிக்கை எடுத்து பின் அன்று ராத்திரியிலே நாம் புளிப்பில்லா அப்பமும் கசப்பான கீரையோடும் (இயேசுவின் இரத்தம்) அதைப் புசிக்கவேண்டும் என்பதை தேவன் கூறுகிறார்.

ஆனால் சபையாக தான் இதனை புசிக்க வேண்டும் என்பதையும் இதனை புசித்து மீதி வைக்க கூடாது என்பதையும் தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.மேலும்,

யாத்திராகமம்: 12:11

அதைப் புசிக்க வேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக் கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.

இந்த பஸ்கா பண்டிகை தான் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக அவருடைய மாம்சமும், இரத்தமும் நமக்கு புசிக்க தருவது தான் கர்த்தருடைய இராப்போஜனம்.   அதனால் இதன் சத்தியத்தை நாம் புரிந்துகொண்டு இராத்திரியில் தான் புசிக்கவேண்டும் ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

இதனை புசிக்கிறவர்கள் சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்டினவர்களாகவும் , சுவிசேஷத்தை கால்களில் தொடுத்தவர்களாகவும், கிறிஸ்துவின் வசனத்தை பிடித்து கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

இவ்விதமாக புளிப்பில்லா அப்பம் கிறிஸ்துவின் சரீரமும், கசப்பான கீரை கிறிஸ்துவின் இரத்தம் இவைகளை புசிக்கு முன்பு ஒருவரையொருவர் கால்கள் கழுவிதான் புசிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மாதிரி காட்டுகிறார். எப்படியெனில் அவர் தம்முடைய சீஷரின் கால்களைக் கழுவினதை நாம் வாசிக்க முடிகிறது.

யோவான்: 13:14

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

இவ்விதமாக நம்முடைய ஆத்தும இரட்சிப்பின் துவக்கமாகயிருக்கிறது. அதை தான் தேவன் கர்த்தருடைய பஸ்கா என்று சொல்கிறார்.                                                                                                      

இந்த மாதம் தான் நம்முடைய பிரதானமான மாதம் வருஷத்தின் முதல் மாதம் இந்த நாள் தான் நம்முடைய பிறந்த நாள். ஆனால் அநேக பேர் பாவ சந்ததியாக நாம் இவ்வுலகில் பிறப்பதை பிறந்தநாள் என்று சொல்லி உலகப் பிரகாரமாக கொண்டாடுகிறார்கள். அதனால் தேவனுடைய வார்த்தை சொல்கிறது உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்பை தான் தேவன் பிரதானமாக சொல்கிறார். நாம் இரட்சிக்கப்பட்ட அன்று ராத்திரியிலே,

யாத்திராகமம்: 12:12

அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.

அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.

பிரியமானவர்களே இவை தேவன் நம் உள்ளமாக வீட்டில் பிரவேசித்து செய்கிற காரியங்களை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் எகிப்தாக இருந்த நம் உள்ளத்தில் கடந்து வருவார். அப்போது நம் உள்ளம் புது சிருஷ்டியாக இருக்குமானால் தேவன் எகிப்தின் வாதைகளை நமக்குள்ளே அனுப்ப மாட்டார்.

அதனால் பிரியமானவர்களே இந்த நாளில் வாதை கொள்ளைநோய் இவை நம்மை தொடாமல் இருக்க வேண்டுமானால் நம் உள்ளம் இயேசுவின் இரத்தத்தால் மீண்டெடுக்கப்படவேண்டும் யாவரும் ஒப்புக் கொடுப்போமா. ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.                     

-தொடர்ச்சி நாளை.