தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

II சாமுவேல்: 22:2

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலூயா.

 விசுவாச யாத்திரையில்:- தேவன் நம்முடைய பாதுகாப்பு:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தர் எகிப்தில் பத்தாவது வாதையாகிய தலைபிள்ளை சங்காரத்தை அனுப்பியதையும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைபிள்ளை முதல் அனைத்து தலைபிள்ளை மற்றும் மிருக ஜீவன்களுடைய தலையீற்றுகள் வரையிலும் சங்கார தூதனை அனுப்பி சங்கரித்ததையும் தியானிக்க முடிந்தது.     அதற்குப்பின் தேவன் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தவில்லை.     அதனால் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்யும் படியாக பார்வோனும் அவனுடைய ஜனங்களை இஸ்ரவேலை துரிதப்படுத்தி அனுப்பிவிட்டதை பார்க்கிறோம்.     காரணம் தேவன் நினைத்த நோக்கம் பத்தாவது வாதை அனுப்பியதில் நிறைவேறியது ஏன் என்றால் ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்ட வேண்டும்.     

அதின் இரத்தம்  ஒவ்வொரு வீட்டிலும் தெளிக்கப்பட வேண்டும்.     தன் குமாரனாகிய கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்தி அந்த பலியினாலே எல்லா உள்ளமாகிய வீட்டிலும் முதற்பேறானவராயிருக்கும் படி செய்ய வேண்டும், என்பதை காட்டும் படியாகவே தேவன் எகிப்தில் வைத்து இதனை செய்கிறார்.   ஏனென்றால் எல்லா உள்ளமும் பாவத்தில் பிறந்து (எகிப்தில்) பின்பு மீட்கப்பட வேண்டும் என்பதை இவ்விதம் தெளிவுபடுத்துகிறார்.     அதன் பிறகு தேவனுக்கு ஆராதனை செய்வது தான் தேவனுக்கு பிரியமான ஆராதனை.     அதனை தேவன் பத்தாவது வாதையை அனுப்பி நிறைவேற்றுகிறார்.

மேலும் எகிப்திலிருந்து விடுதலை ஆன ராத்திரி ஒரு முக்கியமான ராத்திரி ஆதலால்,

யாத்திராகமம்: 12:42

கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.                                         

இதுதான் பஸ்கா ராத்திரி.     இதனை ராத்திரி தான் ஆசரிக்க வேண்டும். எப்படியென்றால் சத்தியத்தை யாராலும் மாற்றி வரமுடியாது.     கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு செய்து காட்டிய மாதிரியை நாம் மாற்றுவோமானால் நாம் அவரில் நிலைத்திருக்கிறவர்கள் அல்ல.     நாம் அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே மிகுந்த கனிகளைக் கொடுக்க முடியும், மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால்ப் பிதா மகிமைப்படுவார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு முன்பாக அவர் சீஷர்களை பந்தியிருக்க வைக்கிறதைப் பார்க்கிறோம்.     ஆனால் உங்களில் ஒருவன் என்னை காட்டி கொடுப்பான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேனென்று சாட்சியாக சொன்னார். அப்போது,

யோவான்: 13:26

இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

யோவான்: 13:30

அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

பிரியமானவர்களே பஸ்கா ஆசரிப்பு ராத்திரியாக இருந்தது.   மற்றும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன் சீஷர்களை பந்தியிருத்தியது இராக்காலமாயிருந்தது.     அதனால் இராப்போஜனம் என்ற வார்த்தை வேத புஸ்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.   நம் நேரத்திற்கும், வசதிக்கும் தக்க தேவன் மாறுகிறவர் அல்ல.     நாம் தான் அவர் சமயத்திற்கு மாறவேண்டும் என்று திட்டமாக கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் இராப்போஜனம் பண்ணும்போது, சபை கூடி வரும் போது தான் புசிக்கவேண்டும்.     ஆனால் சபைகளில் பிரிவினை இல்லாதபடி ஒற்றுமை காணப்பட வேண்டும்.

I கொரிந்தியர்: 11:18-21

முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன், அதில் சிலவற்றை நம்புகிறேன்.

உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.

இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

பிரியமானவர்களே நம் தேவன் நமக்கு இராப்போஜனம் தான் கட்டளையிட்டிருக்கிறார்.

இதனை புசிக்கும் நாளிலிருந்து தான் விசுவாச யாத்திரை தொடங்குகிறது.     ஆனால் அந்நியன் ஒருவனும் அதை புசிக்கக் கூடாது.     அந்நியன் யார்? ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் மீட்கப்படாதவர்கள்.

யாத்திராகமம்: 12:43

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

அடுத்தபடியாக நம்முடைய வாழ்க்கையில் எதை நாம் முதன்மையாக எண்ணி வைத்திருக்கிறோமோ அதனை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்,     ஏனென்றால் கர்த்தர் மோசேயை நோக்கி சொல்கிறார்; மனிதரிலும், மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கும் முதற்பேறனைத்தும் எனக்கு பரிசுத்தப்படுத்து, அது என்னுடையது.

நம் யாத்திரையும் பழைய வாழ்க்கை எதுவும் இருக்கக்கூடாது என்றும், நாம்    விசுவாச யாத்திரை செய்வது; கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று பிதாக்களுக்கு ஆணையிட்டதும் பாலும்,தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு வரப் பண்ணும் காலத்தில் இந்த மாதத்திலே இந்த ஆராதனை செய்வாயாக என்று கர்த்தர் நமக்கு ஆணையிட்டிருக்கிறார்.

மேலும் பார்வோன் ஜனங்களைப் போகவிட்ட பின் ஜனங்கள் யுத்தத்தை கண்டால் மனமடிந்து எகிப்துக்கு திரும்புவார்கள் என்று சொல்லி பெலிஸ்தரின் தேச வழியாய் போவது சமீபமானாலும் தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய் ஜனங்களை சுற்றிப் போகப்பண்ணினார்.     இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து அணி அணியாய் புறப்பட்டு போனார்கள்.                                                        

யாத்திராகமம்: 13:19

மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான்.     தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.

இவை எதற்கு என்றால் யோசேப்புக்கு ஒரு ஆத்தும உயிர்ப்பு உண்டு என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

ஏன் என்றால் அந்த எலும்பு கானானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.     எலும்பு என்பது திருஷ்டாந்தத்தில் ஆத்துமாவை காட்டுகிறது.     பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைக்கும் படியாக தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறார். 

அவ்விதம் நாம் ஒரு இஸ்ரவேலராக இருப்போமானால்,

யாத்திராகமம்: 13:21

அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.

இதை தான் யோவான் ஸ்தாபகன் சொல்லுகிறார் எனக்கு பின் ஒருவர் வருகிறார் அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்க்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல அவர் பரிசுத்த ஆவியினாலும்,

அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

இவை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை காட்டுகிறது.     அவர் நமக்கும், நம் ஆத்துமாவுக்கு காவலாகவும், கோட்டையாகவும், அரணாகவும் காத்து நம் விசுவாச யாத்திரையில் முன் செல்கிறார்.

யாத்திராகமம்: 13:22

பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

பிரியமானவர்களே நாம் தேவ சித்தம் செய்து எகிப்தை  (பாவத்தை) விட்டு விலகுவோமானால் கர்த்தர் எப்போதும் நமக்கு நிழலாயிருக்கிறார்.     நாம் எந்த சத்துருவுக்கும் பயப்படவேண்டாம்.     ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் இந்த வார்த்தைகளால் ஆசீர்வதிப்பாராக.             

-தொடர்ச்சி நாளை.