தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 119:18

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.   

அல்லேலூயா.

 இரட்சிப்பை காத்துக் கொள்ளுதல் பின்னிட்டு திரும்பக்கூடாது:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினதையும் அவர்கள் யாத்திரையில் அவர் அவர்களுக்கு பகலில் மேகஸ்தம்பத்திலும், இரவில் அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று அவர்களை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்காதபடி பாதுகாத்து வந்தார் என்பது நமக்கு விளங்குகிறது.     அதுபோல் நம் ஆத்துமா பாவமாகிய எகிப்த்திலிருந்து விடுதலையாகி வரும் போது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவன் அதனுள் இருக்கிறதினால் நமக்கு யாத்திரையில் வெளிச்சம் காட்ட கர்த்தர் நமக்கு ஆவியின் அபிஷேகமும் அக்கினியின் அபிஷேகமும் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.     எந்த  சத்துருவும் தொடாதபடி நம்மை பாதுகாக்கிற தேவனாக காணப்படுவார்.

இஸ்ரவேல் புத்திரருடைய யாத்திரையில் கர்த்தர் மோசேயிடம் சொல்வது,

யாத்திராகமம்: 14:3,4

அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.

ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.

பிரியமானவர்களே எவ்வளவோ துன்பத்தை பார்வோனும், 

எகிப்தியரும் அனுபவித்திருந்தும் கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதினால் அதை கஷ்டம் என்று உணராமல் இருந்தான் என்பது நமக்கு வாசிக்க முடிகிறது.     ஆனால் பத்தாவது வாதையில் கூட இஸ்ரவேலருக்கு ஒரு மீட்பு (ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்) வந்தது.     அப்போது அவர்கள் புறப்படுகிறார்கள் ஆனால் மீண்டும் தேவன் மகிமை படும்படியாக பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துகிறார்.     ஆனால் பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்கிறார்.

அதே போல் பார்வோன் தன் இரதத்தை பூட்டி தன் ஜனங்களையும் கூட்டிக்கொண்டு பிரதானமான அறுநூறு இரதங்களையும் அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனார்கள்.

ஆனால் எகிப்தியர் இஸ்ரவேலரை தொடர்ந்து போய் ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கிற இஸ்ரவேலரை கிட்டினார்கள்.

பார்வோனும் அவனுடைய சேனையும் சமீபித்து வருகிறதை கண்ட இஸ்ரேலர்கள் பயந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

யாத்திராகமம்: 14:11

அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?

பலவிதமாக இஸ்ரவேலர் முறுமுறுத்தார்கள்.

எப்படியெனில் இவ்விதமாக சாகிறதை பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்கிறது நலமாயிருக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால் நாமும் இப்படித்தான் நடந்து கொள்கிறோம். எகிப்தியன் துன்பப்படுத்திய போது கூக்குரலிட்டார்கள்.

கூக்குரலை கேட்ட தேவன் தன் தாசர்களை அங்கு அனுப்பி இஸ்ரவேலருக்கு இரக்கம் காட்டுகிறார்.     ஆனால் நன்றியில்லாத இஸ்ரவேலர்கள் வெளியில் வந்தவுடன் தேவனுக்கு விரோதமாக பேசுகிறார்கள்.                                                                                                               

இதே போல் தான் இக்கட்டில் விடுவித்த நம் தேவனை மற்றும் சில கஷ்டங்கள் வந்தவுடன் முணுமுணுக்கிற அனுபவம் நம்மிடத்தில் உண்டா என்று சிந்தியுங்கள்.

யாத்திராகமம்: 14:13-14

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.

பிரியமானவர்களே கர்த்தர் எகிப்தியர் நடுவில், இஸ்ரவேலர் இவ்வளவு பெரிய இரட்சிப்பை, அடையும் பொருட்டாக அவருடைய அற்புதங்களை விளங்க பண்ணினார்.     மேலும் யாத்திரை துவக்கத்தில் தேவன் அவருடைய மகிமையை விளங்க பண்ணும் பொருட்டாக மீண்டும் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தி, இஸ்ரவேலரை எகிப்தியர் பின் தொடர வைக்கிறார்.     என்னவெனில்,  இவ்விதமான பெரிய இரட்சிப்பை அடைந்தவர்களுடைய இருதயத்தையும் தேவன் சோதிக்கிறார்.     எப்படியெனில் எகிப்தியர் நடுவில் செய்த எல்லா காரியங்களையும் இஸ்ரவேலரும் கண்டார்கள். அதனால் இஸ்ரவேலருக்குள்ளும் தேவனைப் பற்றிய பயமும், அச்சமும் உண்டாயிருக்க வேண்டும்.     ஏனென்றால் இஸ்ரவேலருடைய இருதயம் மீண்டும் எகிப்தை நினைக்கக்கூடாது என்று பெரிய காரியங்களைச் செய்கிறார்.     ஆனால் இஸ்ரவேலருக்கோ யாத்திரையின் துவக்கத்தில் தேவனுடைய நாமத்தின் மகிமைக்காய் தேவன் செய்த காரியத் திலே அவர்களுடைய இருதயம் எகிப்தை நினைத்து விட்டது.

அதனால் மோசேயை வைத்து தேவன் சொல்கிறார் பயப்படாதிருங்கள்; இன்றைக்கு காணும் இரட்சிப்பை பாருங்கள் இன்றைக்கும் நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்கள்.     என்னவென்றால் எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும் நாம் பின்னிட்டு பார்க்க கூடாது.     எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார் என்பதை கருத்தில் கொண்ட நம் தேவன் இவ்விதம் பேசுகிறார்.                                                                                         

பிரியமானவர்களே இதோ யாருக்கோ என்று நினைத்து விடாதீர்கள்.     இவை நமக்கு தான் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு நம் பழைய பாவ, உலக, பாரம்பரியமாகிய அக்கிரமம், மீறுதல் இவற்றிற்கு போகக்கூடாது என்றும் கர்த்தர் நமக்காக பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசம் நம்மளில் வளரவேண்டும். அதனால்,

எபிரெயர்: 2:1-4

ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,

முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,

அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

ஆதலால் அன்பானவர்களே நாம் பெற்ற இரட்சிப்பை எந்த ஒரு தேவனுக்குப் பிரியமில்லாத கிரியையினாலும் இழந்து  விடக் கூடாது.      அப்படி இழந்துவிட்டால்,

உபாகமம்: 28:68

இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

அதனால் பிரியமானவர்களே நாம் விட்டு வந்த கிரியைகளை நாம் மீண்டும் செய்யாதபடி பாதுகாத்துக் கொள்வோம் ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                                                                                                         

-தொடர்ச்சி நாளை.