தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ரோமர்: 3:26

கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     

அல்லேலூயா.

எகிப்தில் பத்தாவது வாதை - இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம்மை தேவன் தெற்றுகளால் முற்றுகை போடுவதை குறித்து நாம் தியானித்தோம் என்னவெனில்,

ஏசாயா: 29:1-3

தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,

அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.

உன்னைப் சூழப் பாளயமிறங்கி உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்.

இவ்விதமாக பண்டிகைகளை அனுசரித்து வந்தால் நியாயத்தீர்ப்பு உண்டாகும் அதனை குறித்து,

ஏசாயா: 29:5-6

உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர் களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.

இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.                                                                                   பிரியமானவர்களே அநேகர் தங்களுக்கு ஏன் வாழ்க்கையில் போராட்டம் வருகிறது என்று தெரியாமல் இருக்கிறார்கள். குற்றமில்லாமல் தேவன் தண்டிக்கிறவர் அல்ல.     நாம் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியா விட்டால் தான் பெருங் காற்று, இடி முழக்கம்,புசல், அக்கினி ஜுவாலை இவையெல்லாம் நம் தேசத்தில் மாத்திரமல்ல நம் உள்ளத்திலும் அனுப்பி நம் உள்ளத்தை உடைத்து கொண்டிருப்பார்.

மேலும் நாம் இரட்சிப்பு பெற்று கிறிஸ்துவின் சரீரமாக நாம் புதிய சாயலை பெற்ற பிறகு பழைய பாரம்பரிய சடங்காச்சாரங்கள், வழிபாடுகள் எல்லாவற்றையும் நம் உள்ளத்திலிருந்து விட்டுவிடவேண்டும்.     கிறிஸ்து தான் நாம் முழு உள்ளமாக இருக்க வேண்டும் வேறு எந்த சிங்காசனமோ உள்ளத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக தேவன் நம் எகிப்திலிருந்து பொல்லாத சிங்காசனங்கள் மாற்றப்படும் படியாக தேவன் எகிப்தில் பார்வோனின் இடத்தில் எல்லா தலையீற்றுகளையும் அழிக்கும் படியாக கட்டளை கொடுத்தது மாத்திரமல்ல எகிப்தின் நடுவே கடந்து போகிறவராக நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

நம்முடைய தேவன் நம் உள்ளத்தில் வரும் போது வேறு எந்த அந்நிய ஆராதனையோ இருக்கக்கூடாது.     நம்மை பரிசுத்தப்படுத்தின நாள் எப்போதும் நினைவு கூருதலாக  இருக்க வேண்டும்.     அதைத்தான்,

யாத்திராகமம்: 12:14,15

அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.

புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.

புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் புசிக்க வேண்டாம்.     அது வீடுகளிலும் இருக்கக் கூடாது.     அதை நீக்கி விடவேண்டும் என்று சொல்லப் படுவது என்னவென்றால் கிறிஸ்துவின் சரீரம், இரத்தமும் நாம் புசித்து நம் இரட்சிப்பை பெற்ற பின்பு பழைய பாரம்பரிய எந்த கலாச்சாரங்களோ அதின் கிரியைகளோ பாராம்பரிய வாழ்க்கையின் ஆராதனையோ மற்ற எந்த தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களோ நம் உள்ளமாகிய வீட்டில் இருக்கக்கூடாது என்பதை தேவன் மோசே மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தெரிய படுத்துகிறார்.     மேலும் தேவன் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாகக் ஏற்படுத்துகிறார்.

கர்த்தர் சொன்னது போல் மோசே இஸ்ரவேல் மூப்பரை அழைத்து நீங்கள் உங்கள் குடும்பங்களுக்கு தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு பஸ்காவை அடித்து,

ஈசோப்பு கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற் சட்டத்திலும், வாசலின் நிலை கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்.     விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டு புறப்பட வேண்டாம்.

கர்த்தர் எகிப்தியரை அதம் பண்ணுவதற்கு கடந்து வருவார் இரத்தம் தெளிக்கப்பட்டதை காணும் போது கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம் பண்ணுவதற்கு வரவொட்டாமல் வாசற்படியை விலகி கடந்து போவார்.

யாத்திராகமம்: 12:24

இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக் கொள்ளக்கடவீர்கள்.

கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,

இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான்.     அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்.     கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.

நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.

எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் அந்த ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள்.

பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்கினார்கள்.     ஆனால் கர்த்தர் இஸ்ரவேலருக்கு எகிப்தியருடைய கண்களில் தயவு கிடைக்க செய்தார்.     அவர்கள் ராமசேஸை விட்டு கால்நடையாய் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்கு போனார்கள்.     அவர்கள் பிள்ளைகள் தவிர ஆறு லட்சம் புருஷராயிருந்தார்கள்.

எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவை புளிப்பில்லாத அப்பங்களாக சுட்டார்கள்.     அவர்கள் எகிப்தில் தரித்திருக்க கூடாமல் திறந்து விடப்பட்டதால் அது புளியாதிருந்தது.     அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம் பண்ணவில்லை.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம்.

பிரியமானவர்களே கர்த்தர் பார்வோனின் இருதயத்தை ஒன்பது வாதை வரையிலும் கடினப்படுத்தினதை நாம் பார்க்க முடிகிறது.     பத்தாவது தலைப்பிள்ளை சங்காரம் செய்கிறார்.     இந்த தலைபிள்ளை சங்காரத்தில் யாருடைய வீடுகளில் இரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததோ அந்த வீடுகளைச் சங்கார தூதன் பிரவேசிக்க அனுமதிக்க வில்லை.

ஆனால் இஸ்ரவேலருக்கு இரத்தம் தெளித்தலை பற்றி தேவன் கூறுகிறார்.     அதனை மோசே அவர்களிடம் சொல்லும் போது அவர்கள் அதற்கு கீழ்படிகிறார்கள்.     பஸ்கா பலியிடப்படுகிறது.     அதனால் தேவன் அவர்களை எகிப்தியரின் கையிலிருந்து விடுதலை பண்ணி இரட்சிக்கிறார்.     அதுமட்டுமல்ல எகிப்தியரின் பொருள்கள் கொள்ளையாட எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்க பண்ணுகிறார்.

அதுமாத்திரமல்ல அவர்கள் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்வதற்கு அவர்கள் எகிப்தியரிடத்திலிருந்து விடுதலையாகிறார்கள்.     தேவன் விரும்புகிற ஆராதனை செய்யும் இடத்திற்கு யாத்திரை புறப்படுகிறார்கள்.     மேலும் சங்கார தூதன் கையிலிருந்து ஜீவன் தப்ப கிருபை கிடைக்கிறது.

இவையெல்லாவற்றையும் நாம் கவனித்துப் பார்த்தால் நாம் எப்படி தேவனை ஆராதனை செய்ய வேண்டும் என்று தேவன் நமக்கு தெளிவாக திருஷ்டாந்தப்படுத்துகிறார்.     இவ்விதமாக பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டு பழைய சகலத்தையும் விட்டுவிட்டு, புளிப்பில்லா அப்பத்தோடு (கிறிஸ்துவோடு)

ஐக்கியதைப்பட்டு கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு தேவனை பின்பற்றி நாம் எகிப்தின் சகல கிரியைகளை (முதல் தரமாக நினைத்த சகலத்தையும்) விட்டுவிட்டு முதற்பேறானவராக கிறிஸ்து உள்ளத்தில் வெளிப்பட்டு நாம் தேவனை ஆராதனை செய்யும் படியாக நம்மை தாழ்த்திக் ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                   

-தொடர்ச்சி நாளை.