தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 20:5

நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலூயா.

இரட்சிப்பின் வல்லமையை பெற்றுக் கொள்ளுதல்:-திருஷ்டாந்தம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் உத்தம ஆசிர்வாதங்கள் என்ன என்றும் அது எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் தியானித்தோம்.  மாயையாக இருக்கிற ஆசீர்வாதங்கள் நிலை நிற்காது அதனை நாம் நம்பினால் நம் ஆத்துமா அழிந்து போவதற்கு ஏதுவாகும் என்பதை குறித்தும் தியானித்தோம்.      மேலும் மனுஷர்களால் ஏமாறாதபடி, பிசாசினால் வஞ்சிக்கப்படாத படி நாம் நம் ஆத்துமாவை காத்துக் கொண்டு உள்ளான மனுஷன் கிறிஸ்துவின் சாயலாக விண்ணவர் சாயல் அடைந்து சிரசில் பொற்கீரீடம் தரிப்பிக்கபட்டவர்களாக காணப்பட வேண்டும்.      அப்படி நம் வாழ்வில் உத்தம ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க வேண்டுமானால் தேவனுக்கு ஆகாத காரியங்களை எல்லாம் நாம் புறக்கணித்து, தள்ளிப் போட்டு, நாம் பரிசுத்தம் பெற்று அதில் நாம் வளர்ந்து அனுதினம் தேவனுக்கு ஆராதனை செய்து (பலி செலுத்தி) வருவோமானால் நாம் நித்திய ஆசீர்வாதங்களுள்ளவர்களாக முடியும்.      மேலும் நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்போம் என்பதில் மாற்றமில்லை.

தேவன் ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் ஆசாரிய ஊழியம் கொடுக்கிறதை நாம் வாசிக்க முடிகிறது.     ஆனால் இப்போது நம்முடைய ஆசாரியனும், பிரதான ஆசாரியனும் கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து என்பதை வசனத்தின் மூலம் நாம் தெரியப்படுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியன், பிரதான ஆசாரியனான பிறகு நம்மை ராஜரீகமான ஆசாரிய கூட்டாய் மாற்றுகிறதை நாம் பார்க்கிறோம்.     அதைத்தான்,

I பேதுரு: 2:9,10

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள். இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்.

பிரியமானவர்களை இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால் தேவன் அவருடைய வேலையை நம்மளில் இருந்து செய்யும் படியாக இருளில் இருந்த நம்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து வஸ்திரத்தைத் தரிப்பித்து நம்மை அனுதினம் அவர் மன்னாவினால் போஷித்து , நம்மை அனுதினம் ஆத்மாவை ஆத்மீகத்தில் வளர்த்து நம்மளில் தங்கி, அவர் தம்முடைய வேலையை செய்து, நம் மேல் இரக்கம் காட்டுகிறவராக காணப்படுகிறார்.

யாத்திராகமம்: 29:1-9

அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்ய வேண்டியதாவது: ஒரு காளையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக.

புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி,

அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,

ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி,

அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,

அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து,

அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ் செய்வாயாக.

பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக.

ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டை பண்ணுவாயாக.

பிரியமானவர்களே மேற்கூறிய வசனம் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் என்று சொல்வது நாமும் நம் ஆத்மாவும் எப்படி தேவனிடத்தில் தாழ்த்தி ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதையும் அப்படி தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் நாம் ஒப்புக் கொடுத்தால் கர்த்தர் அவருடைய ஆவியின் அபிஷேகத்தை நம்மளில் ஊற்றி நம்மை அவருடைய வேலைக்கு பிரதீஷ்டிப்பார்.

நாம் நம்முடைய பழைய பாரம்பரிய பாவ பழக்க வழக்கங்கள் அத்தனையும் விட்டவர்களாக நம்முடைய உதட்டின் காளையாகிய ஸ்தோத்திரபலியை கிறிஸ்து மூலமாய் தேவனுக்கு செலுத்துகிறவர்களாகவும், புளிப்பில்லா அப்பம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களாகவும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், கோதுமையின் மெல்லிய மாவினால் உண்டு பண்ணுகிறது என்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய கோதுமை மணி மூலம் உபதேசிக்கப்பட்ட புதிய கற்பனைகளாகிய அபிஷேகிக்கப்பட்ட அவருடைய வசனத்தால் நாம் நிரப்பப்பட்டு அவற்றை நம் சரீரமாகிய கூடைகளோடு தேவ சமூகத்தில் துதி சத்தத்தால் நிறைந்தவர்களாக தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, மேலும் அவருடைய வசனத்தால் நம்மைப் சுத்திகரித்துக் கொண்டு, இரட்சிப்பை சுதந்தரித்து நம் உள்ளான மனுஷனில் பெலன் பெற்று சத்தியத்தை சார்ந்து கொண்டு, வரங்களையும் பெற்றவர்களாக, தலையில் பாகை, பரிசுத்த பொற் கிரீடமும் பெற்றுக் கொண்டு தேவனுடைய அபிஷேகத்தால் நிரப்பப்படும் படியாகவே தேவன் நமக்கு நித்திய கட்டளை என்று ஆரோனையும், அவன் குமாரரையும் திருஷ்டாந்தபடுத்துகிறார். இவ்விதமாக நாம் இரட்சிப்பின் வல்லமையை பெற்றுக் கொண்டு வாழும் படி தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போம்.       ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.             

  -தொடர்ச்சி நாளை.