இஸ்ரவேலர் யார் ? விளக்கம்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Oct 25, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ரோமர்: 9:4

அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலுயா.

இஸ்ரவேலர் யார் ? விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் அவருடைய ஜனமும், அவர் நம்முடைய தேவனுமாயிருக்கிறதை குறித்து நாம் தியானித்தோம்.      ஆனால் நாம் நினைப்போம் நாம் தேவனை தான் ஆராதிக்கிறோம்.     நாம் அவருடைய ஜனம் தான் என்று நினைப்போம்.     ஆனால் கர்த்தர் எல்லோரையும் அவருடைய ஜனமென்று சொல்லவில்லை யாரை சொல்கிறாரென்றால் உண்மையான இருதயத்தோடும், பூரண நிச்சயத்தோடும் அவரிடத்தில் சேருகிறவர்களை அவர் தம்முடைய ஜனமென்று சொல்கிறார்.     யார் தேவனுடைய ஜனமாயிருக்க தகுதி பெற்றவர்கள் என்றால் மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க சுத்திகரித்து கொள்ளுகிறவர்களும், பழைய பாரம்பரிய பாவ பழக்க வழக்கங்கள் அத்தனையும் விட்டு விட்டு பாரம்பரிய மக்களிடத்திலிருந்து புறப்பட்டு பிரிந்து வருகிறவர்களும் அசுத்தமானதை தொடாதிருக்கிறவர்கள் அவருடைய குமாரரும், குமாரத்திகளும் என்று சொல்கிறார்.

எசேக்கியேல்: 11:19-21

அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

ஆனாலும் சீயென்றிகழப் படத்தக்கதும் அருவருக்கப் படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மேலும் யார் தேவனுடைய ஜனம் என்று நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.      நாம் நம்முடைய மனம் போன போக்கில் நடந்து கொண்டு நாம் தேவனுடைய  ஜனமாயிருக்கிறோமென்று யாரும் சொல்லவே முடியாது.       நன்றாக ஒவ்வொருவரும் தங்களை சோதித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் மாம்சத்தின் செய்கைகளை அழிக்க வேண்டும்.   ஏனென்றால் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் மட்டுமே தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.     ஏனென்றால்,

ரோமர்: 9:6-13

தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.

அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.

அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.

இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,

பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,

மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.

அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.

பிரியமானவர்களே இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது,

ரோமர்: 9:14

ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.

என்னவென்றால் நம் தேவன் மாம்ச கிரியை வெறுக்கிற தேவனேயல்லாமல் ஜனங்களை வெறுக்கிறவர் அல்ல என்பது நமக்கு விளங்குகிறது.

எப்படியெனில் கர்த்தர் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறதை வாசிக்க முடிகிறது.

ஓசியா: 1:2-5

கர்த்தர் ஓசியாவைக் கொண்டு உரைக்கத் தொடங்கின போது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப் பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக் கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சக் காலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.

இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் அல்ல என்று எழுதப்பட்டிருக்கிறதின் காரணமென்னவென்றால் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும் அவன் மனைவி யேசபேலும், யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் இரத்தம் சிந்துவதற்கும் காரணமாயிருந்தார்கள்.      அதனால் தேவன் அவர்களை நாய்கள் யெஸ்ரேலின் மதில் அருகே தின்னும் படி செய்தார்.       அவ்விதம் இஸ்ரவேலின் ராஜ்யபாரத்தை ஒழியப் பண்ணினதை ஒசியா தீர்க்கதரிசியிடம் எடுத்துக் கூறுகிறார்.

அடுத்த படியாக இரண்டாவது கோமேர் கர்ப்பந்தரித்து ஒரு குமாரத்தியைப் பெற்று அவளுக்கு கர்த்தர் சொன்னது போல் லோருகாமா என்று பெயரிட்டான்.       அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ் செய்வதில்லை நான் அவர்களை முழுமையும் அகற்றி விடுவேன் என்கிறார்.

ஓசியா: 1:7

யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.

பின்பு அவள் மூன்றாவதாக  கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு லோக்ம்மீ என்று பெயரிடும் போது கர்த்தர் நீங்கள் என் ஜனமல்ல சொன்னதற்கு பதிலாக,

ஓசியா: 1:10

என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் குமாரத்தி என்று சொல்வது நம் ஆத்துமாவில், விசுவாசத்தில் பலவீனர்கள் மாம்சத்தில் வாழ்பவர்கள், ஆவிக்கேற்றப் பிரகாரம் நடக்காதவர்கள்.

ஆனால் குமாரர், குமாரன் என்று சொல்வது நம் ஆத்துமாவில் உள்ள பூரண கிருபை விசுவாசத்தில் உறுதிப்பட்டு நிலைத்திருப்பது மட்டுமல்ல மாம்ச சிந்தை முழுமையும் மாற்றினவர்கள், ஆவிகேற்ற பிரகாரம் நடப்பவர்கள் மேலும் சேஷ்டபுத்திர பாகம் இழக்காதவர்கள் இவர்கள் இஸ்ரவேலர்.

பிரியமானவர்களே நாம் இஸ்ரவேலராக ஆவிக்கேற்ற ஜனமாயிருக்கும் படி நம்மை ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.    கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.           

-தொடர்ச்சி நாளை.