தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம் 6:9

கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக.     ஆமென்.    அல்லேலூயா. 

பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்கிறவர் யாருக்காக?  விளக்கம்:

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  நாம் கழிந்த நாளில் தியானித்த வேதப்  பகுதியில் இஸ்ரவேலர் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே என்றும், இஸ்ரவேலர்  யார் என்பதனை  குறித்தும் சில உதாரணங்களோடு தியானித்தோம்.    தேவன்,  என் ஜனமாயிருப்பார்கள் என்று சொல்லுகிறவர்கள் இஸ்ரவேலர்கள்.     தேவன் இஸ்ரவேலரை குறித்து  ரோமாபுரி சபைக்கு நிருபம் எழுதும் போது அதில் ஆறு வித  அனுபவம் குறித்து சொல்கிறார்.    இந்த ஆறு அனுபவமும் உள்ளவர்கள் இஸ்ரவேலர்கள்.

மேலும் தூபம் காட்டுகிறதற்குள்ள தூப பீடங்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் இருக்க வேண்டுமென்று எழுதப்பட்டிருக்கிறது. மேற்க்கூறிய ஆறு அனுபவங்களின்  ஒன்று தேவாராதனை இந்த ஆராதனையில் ஜெபம் பாடல் துதி எழும்பிக் கொண்டிருக்கும்.

யாத்திராகமம் 30:1

தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக. 

இந்த தூபப்பீடத்தின் நீளம் அகலம் சதுரமாகவும் இரண்டு முழ உயரமுமாய்  இருக்க வேண்டும் என்றும்,  அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்க வேண்டும். 

இதன் அமைப்பு எல்லாமே கர்த்தர்  அளவு கொடுக்கிறதையும்,  அதின் வேலைப்பாடு செய்யும் படியும், அதில் சுற்றிலும்   பொன்திரணையை  உண்டுபண்ண வேண்டும் என்றும்,  அதில் சுமக்கும் தண்டுகள் எல்லாம் பொன் வளையங்களை உண்டாக்கும்படியாகவு ம் சொல்கிறார்.      பிரியமானவர்களே  தூபப்பீடம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்,  அதின் தண்டுகள் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியும் இணைந்து செயல்பட்டு,  நம் ஆராதனையும்,  நம் ஜெபத்தையும் பரலோக பிதாவுக்கு முன்பாக அது கொண்டு போகப்  படுகிறது என்பதை தூப பீடமும் அதன் அமைப்புகளையும்,  ஆசரிப்புக் கூடாரத்திற்குள் வைக்க வேண்டிய இடத்தையும் திருஷ்டாந்தப் படுத்தி  காட்டுகிறார். 

இவை  எல்லாமே நம் உள்ளான ஆத்துமாவின் காரியங்கள்.

யாத்திராகமம் 30:6-8

சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய். 

ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும். மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன். விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும். 

உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. 

என்னவெனில் இந்த வார்த்தைகள் நாம் தியானிக்கும் போது, 

வெளிப்படுத்தின விசேஷம் 8:2-4

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. 

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான், சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. 

 பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களை நாம் வாசிக்கும் போது,  தேவன் மோசேயிடம் ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியனாகிய ஆரோன் தூபங்  காட்டுவதற்கு தூபபீடம் சித்தீம் மரத்தினால் உண்டாக்க  சொல்கிறதை  பார்க்கிறோம்.     நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து  இந்நாட்களில் நம் சரீரமாகிய ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியனாகவும் பிரதான ஆசாரியனாகவும்,  எல்லாவற்றிக்கும் எல்லாவுமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.      ஏழு தூதர்கள், ஏழு எக்காளங்களை பிடித்திருக்கிறார்கள் என்றால் அந்த ஏழு சபையின்  தூதர்கள் அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏழு  தோற்றத்தில் விளங்குகிறார்.      தூபங் காட்டும் பொற் கலசம் என்பது கிருபையால் நிறைந்த ஆத்துமாக்கள். அவர்  நம் ஆத்துமாவை கரத்தில் ஏந்தி சிங்காசனத்திற்கு முன்பாக நின்று  நாம் ஜெபிக்கிற  வேண்டுகிற  அத்தனை விண்ணப்பங்களையும்,  ஆராதனையும், ஸ்துதி,  ஸ்தோத்திரமும் தேவனுக்கு முன்பாக ஏந்தினவராக  காணப்படுகிறார்.

அவ்வித  ஜெபிக்கிற ஜெபம் ஆராதனை தூபவர்க்கத்தின் புகையானது பரிசுத்த ஆவியானவருடைய கரத்திலிருந்து தேவனுக்கு முன்பாக எழும்புகிறது.      நமக்காக பரிசுத்த ஆவியானவர் மத்தியஸ்தராக நின்று  பிதாவினிடத்தில் விண்ணப்பிக்கிறார்  என்பது நமக்குத் தெரிகிறது. 

அவற்றைத்தான், 

ரோமர் 8:26

அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்.      நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 

பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டின் பகுதியில் ஆசாரியர்கள் ஜனங்களுடைய பாவங்களுக்காக,  வருஷத்திற்கு ஒரு முறை பாவநிவாரண பலியின்  இரத்தத்தினால் அதின் கொம்புகளின் மேல் பிராயச்சித்தம் பண்ணி பாவ நிவர்த்தி செய்வார்கள்.      ஆனால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்து நமக்காக  உயிர்த்தெழுந்து,  அவருடைய ஆவியினால் நாம் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு,  ஆவியானவரே நமக்காக வேண்டுதல் செய்கிறவரும்,  நம் பாவங்களுக்காக பாவநிவிர்த்திக்காக பலியானவருமாயிருக்கிறார். 

மேலும் நமக்காக வேண்டுதல் பரிசுத்த ஆவியானவர் செய்யும்போது ஆவியின் சிந்தை இன்னதென்று அறிந்து வேண்டுதல் செய்வார். அப்போது தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்காகவே நடக்கிறது. 

அவற்றைப் பற்றி தான், 

ரோமர் 8:27-28

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 

 நமக்காக பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்ய வேண்டுமானால் நாம் தேவன் அழைத்த அழைப்பை சரியாக அறிந்து பரிசுத்தவான்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேவன் தூபபீடம் செய்ய சொல்லும் போது எல்லாவற்றையும் பொன்னால் செய்ய சொல்லி நமக்கு திருஷ்டாந்தப்  படுத்துகிறார்.     மேலும் நாம் யாவரும் ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.       

 -தொடர்ச்சி நாளை.