தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்கிறதினால் தானே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலூயா.

சுத்திகரிக்கும் சத்திய வசனம் - நம் ஆத்துமாவை சாகாமல் காக்கும்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவன் ஆரோனை வைத்து திருஷ்டாந்தப்படுத்தி ஜனங்களுக்காக பாவ நிவர்த்தி செய்வதும் மற்றும் ஜனங்களுக்காக தூபம் செலுத்துகிறதையும் நாம் தியானித்தோம்.      ஆனால் நம் சரீரமாகிய ஆசரிப்புக் கூடாரத்தில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசாரியனாகவும், பிரதான ஆசாரியராகவும் விளங்கி நம் பாவங்களுக்காக மரித்து, உயிர்த்து அவர் ஜீவன் நம் ஆத்துமாவிற்கு ஜீவன் தந்து ஜீவனாம் கிறிஸ்து நம் ஆத்மாவில் வெளிப்பட்டு உள்ளான மனுஷன் தேவ சாயலை அணிந்து பின் அவர் பரிசுத்த போஜனம் அனுதினம் புசிக்க தந்து நாம் பரிசுத்தப்பட்டு, ஆவியிலும், ஆத்துமாவிலும், சரீரத்தில் பரிசுத்தமாக்கபட்டு நம் கறைகள் எல்லாம் மாற்றப்பட்டு அனுதினம் பாவங்களை கழுவி சுத்திகரித்து, பரிசுத்தமாக்க படும் போது நமக்குள் உயிர்த்த கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியாக, நம் ஆத்துமாவிற்கு தேவையான ஆசீர்வாதங்களை தரும் படியாக பிதாவினிடத்தில் பரிந்து பேசி வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.       ஆனால் பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து சகலமும் நன்மைக்கேதுவாக நடத்துகிறார்.

நாம் இனி எப்படி தேவனால் காக்கப்பட வேண்டும் என்பதை குறித்து கர்த்தர் மோசேயை நோக்கி சொல்கிறது.

யாத்திராகமம்: 30:12

நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும் போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாத படிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.

இஸ்ரவேல் என்ற கணக்கில் எண்ணப்பட வேண்டுமானால் பாவத்துக்கு மரித்து, நீதிக்கு பிழைத்து தேவ ஆவியினால் நடத்தப்படுகிறவர்களும்,  உள்ளத்தில் உலகத்தின் ஆவிக்கு இடம் கொடுக்காமல் முந்தின நாட்களில் தியானித்தது போல் நம்மில் உள்ள ஆறு வித தோற்றத்தில் மறுரூபம் அடைந்து இருக்கவேண்டும்.    ஆனால் தேவன் அதற்கு ஒரு வயது வரம்பு வைத்திருக்கிறார்.      இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் அவர்கள் தான் சொந்தமாக பாவ அறிக்கை செய்து மற்றும் தேவ நீதி தரிக்க முடியும் என்பதினால் தேவன் அதற்கு ஒரு வரம்பு வைத்திருக்கிறார்.

ஆனால் ஆத்துமாக்களுக்காக பாவ நிவர்த்தி செய்யும் போது கர்த்தருக்கு காணிக்கை செலுத்த வேண்டும்.         ஆனால் கத்தருக்கு காணிக்கை செலுத்தும் போது ஐசுவரியவான் அதிகமாகவும் கொடுக்க வேண்டாம் தரித்திரன் குறைவாகவும் கொடுக்க வேண்டாம்.

யாத்திராகமம்: 30:16

அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும் பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக் குறியாயிருக்கும் என்றார்.

மேற்கூறிய தேவனுடைய வார்த்தைகள் பாவ நிவிர்த்தி செய்யும் படியாக தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.

ரோமர்: 6:2

பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றால் பிழைப்போம்.

ரோமர்: 6:4,5

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

இவ்விதமாக உயிர்த்தெழுதலில் இணைக்கப்பட்டவர்கள் இஸ்ரவேலர்கள் அவர்கள் கர்த்தருக்கு முறைமையின் படியே காணிக்கையை செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.

பின்பு அவர்கள் எவ்விதம் அனுதினம் தங்கள் வாழ்க்கை தேவனோடு இணைந்திருக்க வேண்டுமென்று கர்த்தர் மோசேயிடம் சொல்வது என்னவென்றால்,

யாத்திராகமம்: 30:18-21

கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.

அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனை செய்யவும் சேரும் போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

பின்பு நாம் தியானிக்கும் போது வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் ஒரு பாதத்தையும் உண்டாக்கிய பலிபீடத்துக்கும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு நடுவே வைத்து தண்ணீர் வார்க்க தேவன் மோசேயிடம் சொல்லுகிறதின் கருத்து திருஷ்டாந்தத்தோடு கிறிஸ்து சத்தியம் நிறைந்தவர், சத்திய ஜீவ வசனம் நிரப்பபபட்டவராக பலிபீடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் நடுவே பிரவேசிக்கிறார் என்பதை காட்டுகிறார்.

நம்முடைய ஒவ்வொரு அவயமும் குறிப்பாக கைகளும், கால்களும் வேத வசனத்தால் கழுவப்பட வேண்டும்.

நாம் பலிபீடத்தினிடத்தில் தேவனை ஆராதனை செய்கிறதற்கு போகும் போதெல்லாம் நம்மை ஒப்புக் கொடுக்கும் போதெல்லாம் ஜீவ தண்ணீரினால் நாம் கழுவப்பட வேண்டும்.        சத்திய ஆவியானவரால் நம்மை நாம் கழுவி சுத்திகரித்து கொள்வோமானால் நம் ஆத்துமா சாகாத படி காத்துக் கொள்ள முடியும்.

இது நமக்கு நித்திய கட்டளையாகக் வைத்திருக்கிறார் இந்த கட்டளைகள் நாம் தவற விடாமல் எப்போதெல்லாம் தேவ வசனம் நமக்குத் தருகிறாரோ அந்த வசனம் சத்தியம்.      சத்திய வசனம் நம்மை சுத்திகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.      இது நமக்கு தேவன் வைத்திருக்கிற நித்திய கட்டளை என்பதை மறந்து விடக் கூடாது.     யாவரும் அனுதினம் வசனம்  நம்மை சுத்திகரிக்கும் படியாக ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.       கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.                     -தொடர்ச்சி நாளை.