Oct 28, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உன்னதப்பாட்டு: 4:7

என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

மணவாட்டியின் அபிஷேகம் வெளிப்படும் விதம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நான் தியானித்த வேத பகுதியில் நம் ஆத்துமா சாகாத படி காக்க வேண்டுமானால் தேவன் நமக்கு தந்திருக்கிற நித்திய கட்டளையை கைக் கொள்ள வேண்டும்.      நாம் அனுதினம் பலிபீடத்திற்கு தேவனை ஆராதனை செய்ய போகும் போதெல்லாம் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் தேவனுக்கென்று தகனமாக ஒப்புக் கொடுக்கும் போதெல்லாம் சத்திய வசனத்தால் நம்மை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை தேவன் ஆரோன் மூலம் திருஷ்டாந்தப்படுத்தியும் மற்றும் கிறிஸ்து மூலம் நமக்கு தேவன் போதிக்கிறார்.

மேலும் ஆசரிப்புக் கூடாரத்திற்காக இரண்டு வித அபிஷேக தைலத்தை கர்த்தர் மோசேயிடம் செய்ய சொல்கிறார்.       முதல் அபிஷேக தைலம்,

யாத்திராகமம்: 30:23-25

மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,

இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,

அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.

பிரியமானவர்களே இங்கு நாம் வாசிக்கும் போது அபிஷேக தைலத்தை உண்டு பண்ணும் படியாக தேவன் மோசேயினிடத்தில் சொல்கிறதை பார்க்கிறோம்.        அபிஷேக தைலம் எந்தெந்த வாசனை திரவியத்தில் நிறைய பட வேண்டும் என்றும் எழுதப்பட்டிருக்கிறது.       இவை தெளிவாக நமக்கு தேவன் திருஷ்டாந்தத்தோடு விளக்கிக் காட்டுகிறார்.       கூறப்பட்டுள்ள வாசனை திரவியங்களில் ஒன்றும் குறையாமல் காணப்பட வேண்டும்.       இந்த வாசனை திரவியங்கள் நம் ஆத்துமாவின் கனிகள்.    இந்த திரவியம் எங்கு இருக்கிறது என்றால் நம் ஆத்துமாவில்.     அநேகர் நினைப்பார்கள் அபிஷேகம் வானத்திலிருந்து வரும் என்று பார்ப்பார்கள்.       இன்றும் அநேகர் அதை தான் சொல்கிறார்கள்.      நம் இருதயம் எப்படி புதுப்பிக்கப்பட்டு பழைய சாயலை களைந்து விட்டு புதிய சாயலாகிய கிறிஸ்துவை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ளும் போது கிறிஸ்துவினிடத்திலிருந்து நாம் ஏற்றுக் கொண்ட கட்டளை, கற்பனை, பிரமாணங்கள் மற்றும் அனைத்து தேவ வசனத்தால் உள்ள நற்கிரியைகளிலிருந்து இந்த வாசனை திரவியங்கள் வெளிப்படுகிறது.

மேலும் நாம் ஒரு தோட்டம் என்று கர்த்தர் சொல்கிறார்.        ஒரு தோட்டத்தில் அநேக விருட்சங்கள் நிற்கிறது போல் நம் ஆத்துமா தேவனுடைய தோட்டமாகவும், அந்த தோட்டத்தில் தேவனுக்கு உகந்த விருட்சங்கள் நிற்க வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார்.    தேவனுக்கு பிரியமில்லாத விருட்சங்களை (செயல்பாடுகளை) தேவன் வெட்டியழிக்கிறார்.        நாம் தேவனுக்கு உகந்த நல்ல கனிக் கொடுக்கிற விருட்சங்களாக இருக்க வேண்டும்.      எப்படியெனில்,

ஏசாயா: 51:3

கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

பிரியமானவர்களே நாம் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால் தேவன் நம்மை சீயோனாக மாற்றி அதில் ஆறுதல் தந்து நம் உள்ளத்தில் பாழான ஸ்தலத்தையெல்லாம் தேறுதல் அடையச் செய்வார்.        அதில் ஒன்றும் இல்லாத வனாந்தரமாக வாழ்ந்த நாம் தேவனுடைய உபதேசத்தால் (ஏதேன்) நிறையபடுவோம். கர்த்தரின் தோட்டம் அவர் உலாவிகிற தோட்டம் போலவும் ஆகுவோம். நம் உள்ளத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி, கீத சத்தம் உண்டாயிருக்கும்.

உன்னதப்பாட்டு: 4:13-16

உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனி மரங்களும் மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,

நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப் போளச் செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச் செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.

தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.

வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.

பிரியமானவர்களே கர்த்தர் மோசேயிடம் சில வாசனை பொருட்களை கூட்டி சேர்த்து அபிஷேக தைலம் செய்ய சொல்வது நம் உள்ளத்திலிருந்து அபிஷேக தைலம் வார்க்கப்படுகிறது.       அந்த அபிஷேக தைலம் என்னவென்றால் நம் இருதயம் மிகவும் சுத்தம் செய்து உலகம், மாமிசம், பிசாசின் கிரியைகளை எல்லாம் அழித்து விட்டு உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவியை மட்டும் பெற்று அதோடு தேவனுடைய வார்த்தைகளுக்கு இணங்கி, தேவனுக்கு பிரியமாய் நடந்து சகல நல் வழிகளையும் கற்றுக் கொண்டு நற்சீர் பொருந்தி, நல்ல குணங்களை உடையவர்களாய் நாம் வாழ்வது தான் நல்ல கனிகள் நிறைந்த விருட்சங்களாய் நம் ஆத்மாவின் தோற்றங்கள் எழும்பும்.        அவ்விதமாக எப்போதும் கர்த்தருக்கு பயந்து நடப்போமானால் அவருக்கு உகந்த வாசனையாயிருப்போம்.

அப்போது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சுகந்த திரவியங்களோடு (வாசனையோடு) ஆவியானவராகிய மணவாட்டியானவர் எழுந்து வருகிறார் வந்து தோட்டத்தில் வாசனை வீசும் படி செய்கிறார்.       அந்த வாசனை லீபனோனின் வாசனைக் கொப்பாயிருக்கிறது.  அதைத்தான்,

உன்னதப்பாட்டு: 4:10,11

உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப் பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!                                       என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக் கொப்பாயிருக்கிறது.

பழைய ஏற்பாட்டின் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் வெளிப்படும் மட்டும் மேற்கூறிய ஆசரிப்பு கூடாரத்தின் பகுதிகளை எல்லாம் அபிஷேகம் செய்ய சொல்கிறதை நாம் வாசிக்க முடிகிறது.     இது நமக்கு திருஷ்டாந்ததிற்காகவே தேவன் செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

யாத்திராகமம்: 30:31

இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

இவ்வித பரிசுத்த அபிஷேகம் நம் உள்ளத்தில் உண்டு பண்ணி முழுமையும் நம்மை தேவன் அபிஷேகிக்கும் படியாக ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.        கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.               

-தொடர்ச்சி நாளை.