தேனுக்கே மகிமையுண்டாவதாக 

II கொரிந்தியர்: 10:3,4

நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

ஆத்துமா தரையில் விழுந்து அழியாத படி பாதுகாப்போம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் இந்நாட்களில் ஆத்மீக ஜீவிதத்தில் அநேகர் விழுந்து கிடக்கிறார்கள் அதற்கு காரணம் ஏன் என்பதையும் தியானித்தோம்.      ஏனென்றால் விழுந்து கிடந்தவர்களில் அநேகர் அப்படியே தங்கள் வாழ்க்கையை அழித்து விட்டார்கள்.      சில பேர் எழுந்திருக்கிறார்கள்.     தேவ வசனம் என்ன சொல்கிறது,

நீதிமொழிகள்: 24:16

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

வீழ்ந்து போவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருதய அகந்தை, மன மேட்டிமை, பெருமை இப்பேற்ப்பட்ட எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழும்பினால் சீக்கிரம் விழுந்து விடுவோம்.      அவைகள் எழும்பாத படி காத்துக் கொள்ள வேண்டும்.

கழிந்த நாளில் இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாவையும், ஒரு வெள்ளாட்டு கடாவையும் தியானித்தோம்.       வெள்ளாட்டு கடாவிடன் கண்களுக்கு நடுவே இருந்த ஒரு பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா அந்த கொம்பு முறிந்த பின்பு நான்கு கொம்புகள் எழும்புகிறது.     தேவன் நமக்கு ராஜாக்களை வைத்து தான் தானியேலுடைய தரிசனத்தில் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.      ராஜாக்கள் ராஜ்யங்கள் பூமியிலிருந்து எழுகிறது என்றால், இரட்சிப்பை பூரணமாக பெற்றுக் கொள்ளாத உள்ளத்தில் உலகத்தின் ராஜ்யங்களும், ராஜாக்களுமாகிய முற்பிறப்பு இராட்சத ஆவிகளை தான் தேவன் சொல்கிறது.      நாம் தேவனுடைய சத்திய வார்த்தைகளினால் இரட்சிக்கப்பட்டால் அந்த ராஜ்யம் தேவனுடைய ராஜ்யமும், ராஜாவும்,   ஆசாரியருமாயிருக்கிற கர்த்தராயிருக்கிற   இயேசு கிறிஸ்துவினால் நாம் ராஜாக்களும் ஆசாரியருமாயிருக்கிறோம்

பிரியமானவர்களே அநேகர் கண்கள் சரியாக திறக்கப்படாமல்,  தேவ வசனத்தை உலகத்தோடு சேர்த்து உலக யுத்தம், உலக ராஜ்யம், உலக ராஜ்யங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். ஏமாந்து விடாதீர்கள். கிறிஸ்து: நான் உலகத்தானல்ல என்று சொல்கிறார்.     தேவன் உலக பொருளாகிய ஆயுதங்களால் யுத்தம் செய்கிறவர் அல்ல.      அவர் ஆவியினால் யுத்தம் செய்கிறவர்.      நம் உள்ளத்தில் நடைபெறுகிற காரியங்களை நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.      நம் ஆத்துமாவுக்கு தான் அவர் கிரியை நடப்பிக்கிறவர்.

ஆதலால் தான்,

எபேசியர்: 6:11,12

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் உள்ள போராட்டம் நமக்கு உள்ளது அல்ல.     நம்முடைய போராட்டம் பிசாசனவனோடு கூட என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.       ஏனென்றால் பிசாசானவன் நம் உள்ளத்தை பலவிதத்திலும் மாற்றி விடுவான் அதனால் நாம் எச்சரிக்கையோடு காணப்பட வேண்டும்.

பிரியமானவர்களே உள்ளத்தில் ஏற்படுகின்ற இந்த யுத்தம் எதற்கென்றால் பிசாசானவன் கண்களின் இச்சை, மாமிசத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை நம்முடைய ஆத்மிக கண்ணில் கொண்டு வந்து வளர வைக்கிறான்.       அதைத் தான் தேவன் தரிசனத்தில் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு கிரேக்கு தேசத்தின் முதலாம் ராஜா என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால் நம் மாமிச பிறப்பிலிருந்து வளர்ந்து வந்த கண்களின் இச்சை, இது முதலாம் ராஜா என்று எழுதப்பட்டிருக்கிறது.      தேவன் அதனை முறிந்து போக பண்ணின பின்பு நம் ஆத்மீக வாழ்க்கையில் தேவன் அடுத்த போராட்டத்திற்கு நம்மை அனுமதிக்கிறார்.       அதென்னவெனில் நாலு ராஜாக்களும்,  நாலு ராஜ்யங்களும் எழும்புகிறது.       ஆனால் முந்தினவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது என்று எழுதப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் நம்முடைய ஜென்ம சுபாவம் பல இச்சைகள் அவைகளை தேவனோடு நாம் ஒப்புரவாகும் போது அழிக்கப்படுகிறது.     அதன்பிறகு நாலு ராஜ்யங்கள் எகிப்து, எத்தியோப்பியா, பெலிஸ்தன் அசீரியன் பாபிலோனியன் இந்த நாலு ராஜ்யங்களில் நாலு ராஜாக்கள் என்னவெனில் இராட்சத ஆவிகள் இவைகள் நம் உள்ளத்தில் செயல்படுகிறது.

தானியேல் 8: 23, 24 

அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான்.

அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான்.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட தேவனுக்கு விரோதமான செயல்பாடுகளை ராஜாக்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.     கண்களின் இச்சை, மாம்ச இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகள் நம் வாழ்க்கையில் நிறைவேறி பாதகம் பெருகி வரும் போது கடைசியாக மூர்க்கமும் சூதான பேச்சுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான் என்று எழுதப்பட்டிருப்பது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் (வலுசர்ப்பம்) முந்தின காரியங்கள் கைகூடி வரும் போது இவன் பலத்தோடு எழும்புவான்.     உள்ளத்தில் அதிசய விதமாக அழிப்புண்டாக்கி அநுகூலம் பெற்று கிரியை செய்து எல்லா பரிசுத்த கிரியையும் அதுவரையிலிருந்து எல்லா பலவான்களின் கிரியைகளையும் அழித்து இவனுடைய வல்லமை அங்கு பெருகிக் கொண்டிருக்கும்.

இது என்னவென்றால் உலக பெருமை இதில் அத்தனை பொல்லாத செயல்பாடுகளும் நிறைந்தது.      இவை தான் நம் ஆத்மா வானத்தின் நட்சத்திரமாக இருந்ததை இவ்வித வழிபாடுகளுக்குள் கொண்டு வந்து கீழே தள்ளுகிறது.

தானியேல்: 8:25

அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கை கூடி வரப் பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான், ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான்.                                                                     பிரியமானவர்களே இவ்வித மாம்ச கிரியை உலக மேன்மை, உலக பெருமை, இச்சை இந்த விதமான பெலனையெல்லாம் நம் தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனை நம்மில் அனுப்பி அவருடைய ஆவியினால் முறிக்கிறார்.     அப்போது நாம் வாழ்க்கை பரிசுத்தமாக பாதுகாக்க முடியும் 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே உங்கள் எண்ணம் எப்படிப்பட்டதாயிருக்கிறது.       நாம் நிர்விசாரித்தோடிருந்தால் நம் ஆத்துமாவை சத்துரு அழித்து விடுவான் நம்மை தாழ்த்தி தேவ பாதத்தில் ஒப்புக்கொடுத்து, புதுப்பித்து மனந்திரும்புவோம்.     நாம் பரிசுத்தமாகுவோம்.         யாவரும் ஜெபிப்போம்.      ஒப்புக் கொடுப்போம்.      கர்த்தர் ஆசிர்வதிப்பார்.     

 -தொடர்ச்சி நாளை.