தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ரோமர்: 13:14

துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக் கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

நம்மை அக்கினியால் பரிசோதிக்கிற தேவன்:-அக்கினி தேவனுடைய வார்த்தை: 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் தேவன் நம் நடுவில் (உள்ளத்தில்) உலாவுகிறார் என்றும், அவர் எவ்விதம் உலவுகிறார் என்றும், மேலும் நம் உள்ளத்தை சோதித்து அறிந்து இருதயமாகிய உள்ளத்தில் இருக்கிற துர்குணங்களை கண்டறிந்து எந்த காரியத்தில் விழுந்து கிடக்கிறோம் என்பதனை கண்டறிந்து, நம்மை சீர்திருத்தி மனம் திரும்ப வைக்கும் படியாகவே தேவன் நம் உள்ளத்தில் உலாவுகிறார்.     மேலும் இரண்டோ மூன்றோ பேர் என் நாமத்தினாலே எங்கே இருப்பீர்களோ அங்கே அவர்கள் நடுவில் வாசம் பண்ணுவேன் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறதை பார்க்கிறோம்.

வெளிப்படுத்தல்: 1:13-15

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப் போலவும் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது.

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப் போலிருந்தது.

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; 

பின்பு ஏழு குத்துவிளக்குகளின் ரகசியத்தை எழுது என்று சொல்கிறார்.  ஏழு குத்து விளக்கு ஏழு சபைகளும் ஏழு நட்சத்திரம் ஏழு சபையின் தூதர்களும் என்பதை கூறுகிறதை நாம் பார்க்கிறோம்.

சபைகள் என்றால் கிறிஸ்துவின் மகிமையான கட்டளைகள் ஏழு.   அவைகள் மனந்திரும்புதல், ஞானஸ்நானம், ஆவியின் அபிஷேகம், அக்கினியின் அபிஷேகம், அப்போஸ்தலர் உபதேசம், பரிசுத்தவான்களின் கூடுகை, அப்பம் பிட்குதல், விழித்திருந்து ஜெபம் பண்ணுதல் இந்த ஏழு கட்டளைகளும் மகிமை நிறைந்ததாக நம் ஆத்மாவில் ஜீவன் பெற்று வரும் போது ஏழு வித தோற்றத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிதாவின் கரத்தில் பிரகாசிக்கிறார். இவற்றை தான் வலது கரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.       மேலும் ஏழு நட்சத்திரங்கள் என்பது ஏழு சபையின் தூதர்கள் என்று எழுதப்பட்டிருப்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.      நம் ஆத்துமா மணவாட்டி சபை அதற்குரிய தூதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

இவ்விதமாக தேவன் நம் நடுவில் உலாவுகிறார்.        உலாவுகிற நம் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறது என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை தேவசாயலாக சிருஷ்டித்ததை நாம் பார்க்கிறோம்.      ஆனால் பின்பு தேவன் குளிர்ச்சியான வேளையில் தோட்டத்தில் உலாவ வரும் போது அவர்கள் நிர்வாணிகளாயிருந்ததினால் தேவனுக்கு முன்பாக நிற்க முடியாமல் ஒளிந்து கொண்டதை பார்க்கிறோம்.      ஏனென்றால் அவர்கள் உள்ளத்தில் இருந்த துர்க்குணமாகிய இச்சையின் காரணமாக குறிப்பாக கண்களின் இச்சை அவர்களை முழுமையும் கெடுத்து தேவன் கொடுத்த வஸ்திரம் இழந்து விட்டார்கள்.        அவ்விதம் இழந்து விட்டதின் காரணமாக தேவன் பார்வைக்கு நிர்வாணமாகயிருந்ததால் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள் உங்கள் நிலத்தை பண்படுத்துங்கள் என்று அனுப்பி விடுகிறார்.

அதே போல் இரட்சிக்கப்பட்டு தேவனோடு ஐக்கியப்பட்டு உடன்படிக்கை பெற்றுக் கொண்டு உலக இச்சை மற்றும் துர்குணத்தில் நாம் விழுந்து விட்டால் நம்மை அவருடைய அக்கினியானது பரிசோதிக்கும்.

I கொரிந்தியர்: 3:12,13

ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப் பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,

அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும்.        ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

அவ்விதம் நம்மை பரிசோதிக்கிற தேவன் மகிமை நிறைந்த ஏழு கட்டளைகளாகிய பொன் ஏழு குத்துவிளக்குகளில் ஒவ்வொன்றிலும் நம்மில் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறார்.

என்னவென்றால் முதல் சபை எபேசு சபையின் தூதனுக்கு எழுதுவது என்னவென்றால், பிரியமானவர்களே நாம் துவக்கத்தில் தேவனோடு ஒப்புரவாகும் போது என்னென்ன காரியங்கள் சொன்னோம், செய்தோம் என்று ஒரு நாளும் மறக்கவோ, மறுக்கவோ கூடாது. ஏன்னவெனில் நாம் அநேக காரியங்கள் தேவனிடத்தில் கேட்டறிந்து அவற்றில் உண்மையாக நடந்து கொண்டாலும் ஏதோ ஒரு காரியத்தில் தவறிவிட்டால் அதையும் கட்டாயம் சீர்திருத்தி தேவனிடத்தில் ஒப்புரவாக வேண்டும்.

ஏனென்றால் கர்த்தர் சொல்லுகிறார் உன் கிரியைகளையும், உன் பொறுமையையும், உன் பிரயாசத்தையும், உன் எல்லா நஷ்டத்தையும் சகித்ததையும் என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாச பட்டதையும் நான் அறிந்திருக்கிறேன்.

வெளிப்படுத்தல்: 2:4-6

ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

பிரியமானவர்களே முதல் சபையிலே தேவன் நம் குறையை எடுத்துக் காட்டுகிறார்.       என்னவெனில் நமக்கு சத்தியம் தெரியும் தெரிந்தும் தங்கள் மனதின் யோசனையே செய்கிறோம்.      ஏதாவது காரியங்களில் நாம் அவ்விதம் செய்து விட்டால் ஆத்துமாவில் நாம் சத்தியன் பாதையிலிருந்து விழுந்து விடுகிறோம்.      அப்படி விழுந்து விட்டால் சீக்கிரத்தில் மனந்திரும்பும் படியாக சொல்லுகிறார்.  இல்லாவிட்டால் விளக்குத் தண்டு நம்மிடத்திலிருந்து மாற்றப்படும் என்னவெனில் இருக்கிற வெளிச்சம் நஷ்டம்.

அவ்விதம் ஆகாமல் இப்போதே ஒப்புக் கொடுப்போமானால் தேவனுடைய பரதீசியின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை புசிக்க தருகிறார்.      ஒப்புக்கொடுப்போம்.       ஜெபிப்போம்.           கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.       

  -தொடர்ச்சி நாளை.