தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 12: 28 

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்வது எப்படி- விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், தினந்தோறும் நாம் தேவனுக்கு பரிசுத்த ஆராதனை செய்ய வேண்டும் என்பதை தியானித்தோம், எப்படி பரிசுத்த ஆராதனை செய்ய வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் மகிமையான மணவாட்டி சபையின் அனுபவத்தைப்பெற்றிருக்க வேண்டும். மணவாட்டி சபை மகிமையோடு காணப்பட்டால் மாத்திரமே மணவாளன் சேர்க்க வரும்போது ஆயத்தமாக விழித்திருக்கும். கிறிஸ்து மணவாட்டி சபையை  சேர்க்க வருகிறார்; அதை குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிற தேவனுடைய வசனம் என்னவென்றால்,

மத்தேயு 25:1-13  

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.

அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். 

 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. 

புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 

 மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 

 நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 

அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். 

புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.

 புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 

அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள், கதவும் அடைக்கப்பட்டது. 

பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 

அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 

 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

மணவாட்டி சபையாகிய நாம், எப்பொழுதும் ஆயத்தத்தோடு இதயம் விழித்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அப்படி நாம் விழித்திருக்க வேண்டுமானால், தீவெட்டியில் எண்ணெய் குறையாமல்  இருக்க வேண்டும்.  அவ்விதம் எண்ணெய் குறையாமல் இருக்க நாம் தினந்தோறும் தேவனை உண்மையோடும் ஆவியோடும் ஆராதனை செய்து, ஆனந்த சத்தத்தோடு அவர் சந்நிதிக்கு  முன் வந்து அவரை பணிந்துக்கொள்ள வேண்டும். 

அதைக் குறித்து 

சங்100:1-5 

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 

மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 

கர்த்தரே தேவனென்று அறியுங்கள், நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். 

 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். 

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

மேற்க்கூறிய சங்கீதப்பகுதியை நாம் தியானிக்கும் போது மணவாட்டி சபை எப்படி தேவனை ஆராதனைச் செய்ய வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.  அதனால் நாம் யாருக்கும் பயப்படாமல் கெம்பீரத்தோடு தேவனைப் பாடி துதிக்க வேண்டும். கெம்பீரம் என்பது ஜெயத்தொனி உண்மையாகவும் ஆவியோடும் கெம்பீரச் சத்தத்தோடும் தேவனை ஆராதித்தால் மட்டும் நாம் சத்துருவை மேற்க்கொண்டு ஜெயம் பெற்றுக்கொள்ள முடியும்.  அப்போதுத்தான் கிறிஸ்து நம்முடைய ஆத்துமாவில் ஜெயம் பெறுகிறார். அவருடைய சந்நிதியில்  வரும் போது மகிழ்ச்சியோடு வரவேண்டும்.  ஆனால் அநேகம் பேர் துக்கமுகமாக வருகிறதை பார்க்கிறோம்.  அதற்கு காரணம் என்னவென்றால் நம் ஆத்துமாவில் பூரண இரட்சிப்புப் பெற்றுக்கொள்ளாததால் மனதிற்குச் சந்தோஷம் காணப்படவில்லை. கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியை பார்க்கும் போது ஏழுவித ஆத்மாவின் பலனைப்பெற்று பூரணமாகும் போது தான் பரலோகராஜ்யம் திறக்கப்படுகிறதை பார்க்கிறோம். அவ்விதம் நாம் பூரணமாகப்பெற்றுக் கொள்வோமானால் தேவனுடைய  வசனம் 

வெளி 21:4,5  

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. 

சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

ஆனால் ஆத்மாவின் பலனைப்பூரணமாக பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் சமாதானத்தை அடையமுடியாது.   ஆத்துமாவிலுள்ள சில குறைகளினால் பிசாசானவன் உள்ளத்தில் புகுந்ததினால் நாம் துர்கிரியை செய்து விடுவோம்.  அதனால் நம் ஆத்துமாவிற்கு  சமதானம் இல்லாமல் வாழ்க்கையில் எப்போதும் கண்ணீரும், துன்பமும், துக்கமும், வரும்.  அவ்விதம் நம் வாழ்க்கையில்  இருக்கிறது என்று நமக்கு உணர்வு வருமானால் நாம் நம்மை நாமே சோதித்து  அறிந்து நம்முடைய குறைகளை தேவ சமுகத்தில் அறிக்கை செய்து  மீண்டும் மனந்திரும்பி நாம் தேவனுடைய சத்தியத்தை கைக்கொண்டு அதன் பிரகாரம் நடந்து புதுப்பித்துக்கொள்வோமானால் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நமக்கு சமாதானம் நல்கி நம்முடைய கண்ணீரையும் நம்முடைய துன்பத்தையும் துக்கத்தையும் மாற்றுவார். மேலும் தேவனுடைய வார்த்தையானது  

ரோமர்14: 17  

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 

அதனால் பிரியமானவர்களே நாம்  ஒருபோதும் எந்த துன்பங்கள் வந்தாலும் தேவனுடைய அன்பை விட்டு  நீங்காதபடி அதிகமாக சத்தியத்தில் சார்ந்து பற்றிக்கொள்ள வேண்டும்  ஆனால் எவ்வளவக்களவு நெருக்கங்கள் வருதோ அவ்வளவுக்கதிகமாக நாம் தேவனோடு நெருங்கி வாழ்வோமானால் சகலமும் நன்மைகேதுவாகவே நடைப்பெறும்.

ரோமர் 8:28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

அதை குறித்து ரோமர் 8:35 – 39

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

இவ்விதமாக நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய அன்பை விட்டு பிரியாமல் இருப்போமானால், கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை மகிமையடையச்செய்து மகிமையான  மணவாட்டி சபையாக்கி, மணவாளனாகிய கிறிஸ்து சேர்க்க வரும்போது, நாம் ஆயத்தம் உள்ள கன்னிகைகளை போல நாம் ஆயத்தமாயிருப்போம். அவ்விதம் நாம் ஆயத்தமாயிருப்போமானால் மணவாளனாகிய கிறிஸ்து மணவாட்டி சபைகளாகிய நம்மை அவருடைய கல்யாண வீடடுக்குள் அழைத்து சென்று நம்மை மகிழப்பண்ணி நம்மில் களிகூர்ந்து நாம் கிறிஸ்துவோடு ஒன்றாய் தேவனை ஆராதிப்போம்.  இவ்விதமாக ஆராதனை செய்வதுதான் பரிசுத்த ஆராதனை. ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.