ஆவிக்குரிய ஊழியம் மகிமையான ஊழியம்

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 10, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I கொரிந்தியர் 15: 57

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

ஆவிக்குரிய ஊழியம் மகிமையான ஊழியம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மகிமையான மணவாட்டி சபையாக நாம் மாறி, புதுப்பெலன் பெற்று, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, சத்தியத்தை காத்துக் கெண்டு, நாம் தேவனுக்கு ஆராதனை செய்வது  தேவன் பிரியப்படுகிறார். நாம் வேத வசனம் தியானிக்கும் போது, கர்த்தர் மோசேயை சீனாய் மலையின் மேல் அழைத்ததை வாசிக்கிறோம். ஆனால் தேவன், ஆரோனையோ இஸ்ரவேல் புத்திரரையோ அழைக்கவில்லை. காரணம் என்னவென்றால், மோசேயைப்போல மற்றவர்கள் பரிசுத்த வாழ்க்கை இல்லாததால், தேவன் மற்றவர்கள் யாரையும் அழைக்கவில்லை.  எப்படியெனில் பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை என்பதனை திருஷ்டாந்தப்படுத்தவே கர்த்தர் மோசேயைமட்டும் சீனாய் மலையின் மேல் அழைத்தார்.  சீனாய்மலை என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

யாத்திராகமம் 31:18 

சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

விரலினால் எழுதிக் கொடுக்கிறதை பார்க்கிறோம்.  பழைய ஏற்ப்பாட்டின் பகுதியில் கற்பலகையில் எழுதுகிறது என்னவெனில், பழைய  ஏற்ப்பாட்டின் ஊழியம்  மட்டும் ஒருவன் விசுவாசித்தால், அது மரணத்திற்க்கு ஏதுவான ஊழியம் என்பதை திருஷ்டாந்தப்படுத்தவே தேவன் கற்பலகைகளில் எழுதுகிறதைப் பார்க்கிறோம்.  ஏனென்றால், தேவனுடைய வார்த்தையானது, அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்திய சபைக்கு எழுதுகிற நிருபத்தில் 

2 கொரி 3:3-11

ஏனெனில், நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது. அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. 

நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். 

எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. 

புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 

எழுத்துகளினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்கள். 

ஒழிந்துபோகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? 

ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக்கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 

இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. 

அன்றியும் ஓழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது தேவன் தம்முடைய விரலினால் கற்பலகைகளில் எழுதியது நம்முடைய ஜென்ம சுபாவமாகிய பிசாசின் கிரியைகளாகிய கல்லான இருதயம் ஆகி  இருக்கிறவர்களின் உள்ளம் ஒருக்காலும் மகிமையடைய கூடாததாயிருக்கும். அதனால் நம்முடைய தேவனாகிய கர்த்தர், நம்முடைய கல்லான உள்ளத்தை சதையாக மாற்றுகிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி, தம்முடைய விரலினால் சாட்சிகளை எழுதுகிறதை பார்க்கமுடிகிறது.  ஏனென்றால் தேவனுடைய சாட்சி கிறிஸ்துத்தான். பழைய ஏற்ப்பாடு நாம் தியானிக்கும்போது, மரணத்துக்கேதுவான ஊழியமாகிய மோசே செய்த ஊழியமே மகிமையுள்ளதாக இருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு மகிமையுள்ளதாயிருக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. பழைய ஏற்ப்பாடு வாசிக்கும் போது பார்க்கமுடிகிறது என்னவென்றால் மோசே செய்த ஊழியத்தில் மோசேயினுடைய முகம் இஸ்ரவேல் புத்திரர் பார்க்க முடியாத அளவு மகிமையடைந்திருந்தது.  அதேப்போல் தேவன் சாலொமோனை வைத்து  கட்டின தேவாலயத்தில் மகிமை நிறைந்த போது,  ஆசாரியர்கள் நிற்க கூடாதிருந்தது.     

2 நாளாகமம் 5:11-14  

வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லாரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள். 

ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள், அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள். 

அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள், ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. 

அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று. 

பிரயமானவர்களே சாலொமோன்  கட்டின ஆலயம் பல வாத்திய கருவிகளும் மற்றும் நூற்றிருபது பூரிகை ஊதுகிறவர்களும் நின்று பூரிகைகளை ஊதும் போதும், கர்த்தர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை மகிமைப்படுத்தும் போது, கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. இவ்விதமாக அழிந்து போகிற கூடாரத்தில் இப்படிப்பட்ட மகிமையிறங்குமானால், அழியாத மகிமைக்குரிய  கூடாரத்தில் எவ்வளவு  அதிக மகிமையுண்டாயிருக்கும்.

பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, மரணத்துக்கேதுவான ஊழியத்தை கிறிஸ்து நம் உள்ளத்தில் ஜெயித்து,  ஆவிக்குரிய ஊழியத்தை நிறைவேற்றுகிறதை பார்க்கிறோம். இவ்விதம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  நம் உள்ளத்தில் ஆவிக்குரிய ஊழியம் நிறைவேற்றுகிறதை குறித்து அடுத்த நாட்களில் தியானிப்போம்.   நாமும் பரிசுத்த ஆவியில் நிறைந்து தேவனை ஆராதிப்போம். ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.