தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 14: 15
போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
போஜனபலி என்பது ஆத்துமா அறுவடை-திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருக்கு நாம் பலி செலுத்தும் போது எதைச்செலுத்த வேண்டும் எவ்விதம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் நாம் தியானித்தோம். மற்றும் சர்வாங்க தகனபலி, கர்த்தருக்கு சுகந்த வாசனையான தகனபலியாக இருக்கிறது என்பதனை வசனங்களில் கூட தியானித்தோம். இந்த நாளில் நாம் தியானிக்க போகிறதென்னவெனில், கர்த்தருக்கு போஜனபலி செலுத்துவது தேவன் புசிக்கிற ஆகாரம் நம்முடைய ஆத்துமாவின் அறுவடையைக் குறித்து சொல்கிறார். அதெப்படியெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து போஜனத்தை பற்றி விளக்கி சொல்கிறார்
யோவான் 4: 31-38
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார், என்னை அனுப்பினவருடைய கிரியை செய்து முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது, என்று பிதாவைக் குறித்து சொல்கிறதை வாசிக்கிறோம். நம்முடைய பிதாவாகிய தேவன் நம்மை அவருடைய குமாரன் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். நாம் தேவனுக்கு மகிமையாகிய பலியை செலுத்துவோமானால் குமாரன் மூலமாகத்தான் செலுத்த வேண்டும். ஏனென்றால் குமாரன் கேட்டுக்கொள்வதெதுவோ அதை தகப்பன் கொடுக்கிறார். மற்றும் நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் கிறிஸ்துதான். மேலும் தப்பிதங்களை நமக்கு மன்னித்து, நமக்காக பரிந்து பேசுகிறவரும் அவரே. மற்றும் நம்மை சீர்த்திருத்துகிறவரும் அவரே. நாம் எத்தனை கிறிஸ்துவின் வசனம் கேட்டாலும் சீர்திருந்தாவிட்டால் நம்மை நியாயந்தீர்க்கிறவரும் கிறிஸ்து தான். நம்மளில் யாரும் பிதாவினிடத்தில் நேரடியாக போகமுடியாது என்பதை பழைய ஏற்ப்பாட்டில் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
மேலும் போஜனம் என்று சொல்லும்போது ஆத்துமா அறுவடை. நம்முடைய ஆத்துமா அறுவடை என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய உலகமாகிய உள்ளத்திலிருந்து பிரித்தெடுத்து அவருடைய களமாகிய கிறிஸ்துவினண்டையில் நம்முடைய எல்லா கிரியைகளையும் நன்றாக விளக்கி, நம்முடைய ஆத்துமாவில் எவ்வளவு பதர் (உலகமாகிய பாவம், அக்கிரமம்) இருக்கிறது என்பதை அவர் கையில் இருக்கிற தூற்றுக் கூடையினால் நன்றாக விளக்கி பதரை அவியாத அக்கினியில் சுட்டெரித்து, கோதுமையை களத்தில் சேர்க்கிறார். இவைகள் எப்போது நடக்கிறதென்றால் நாம் கழிந்த நாளில் தியானித்த காரியங்கள் தேவ சமூகத்தில் நம்முடைய பாவ பாரம்பரிய சுபாவங்கள் எல்லாம் தேவனிடத்தில் அறிக்கைப் பண்ணினப்பிறகு, நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவோடு அடக்கம்பண்ணபடுவதற்கு சமமாக மூழ்கி ஞானஸ்நனம் எடுத்த உடன் நமக்கு மேற்க்கூறிய பிரகாரம் நியாயந்தீர்ப்பு நடக்கும்.
அதனனத்தான் மத்தேயு 3: 11,12 -ல்
மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
அவியாத அக்கினி என்று எழுதப்பட்டிருக்கிறது, என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில் பதர்(உலகமாகிய பாரம்பரிய பாவ வாழ்க்கை) அதிகமாக இருந்தால் வாழ்வில் வேதனை ஒரு நாளும் தீராது. இதனால் நம்முடைய வாழ்வில் இரண்டாவது பலி போஜன பலி. போஜன பலி என்றால் நம் ஆத்துமாவை தேவனுக்கு அர்ப்பணித்தலுக்கு திருஷ்டாந்தம்.
லேவியராகமம் 2:1-3
ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,
அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.
நம்முடைய ஆத்துமா, ஞானஸ்நானம் பெற்ற பிறகு கிறிஸ்துவின் ஜீவனடைந்து, தேவனால் அபிஷேகப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு , அவன் காணிக்கை மெல்லிய மாவையும், எண்ணெய் வார்த்து என்றும், அதின் மேல் தூப வர்க்கம் போட்டு என்று எழுதப்பட்டது, கிறிஸ்து நம்முடைய ஆத்துமாவில் இருந்து விண்ணப்பம் பண்ணுகிறார் என்பதற்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. இவ்விதம் அபிஷேகம்பண்ணப்பட்ட ஆத்துமா தேவனுக்கு மகிமை செலுத்தினால் அது கிறிஸ்து தேவனை மகிமைபடுத்துவதை காட்டுகிறது. இது மகா பரிசுத்தமானது.
அடுத்து லேவியராகமம் 2: 4-11
நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.
நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக.
அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி.
நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.
இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து,
அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.
நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.
இவற்றை நாம் தியானிக்கும் போது கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் ஆத்துமாவை எவ்விதத்தில் கிறிஸ்துவின் வசனத்தாலும் அவருடைய வல்லமையினாலும் ஆயத்தமாக்கபட வேண்டும் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. இவைகளை நாம் சிந்திக்கும் போது பழையப்பாரம்பரிய வாழ்க்கை எதுவும் இருக்கக்கூடாது என்பதற்கு புளித்தமாவினால் எதையும் செய்யக்கூடாது என்பது திருஷ்டாந்தம். மேலும் மெல்லிய மாவினால் செய்யப்படவேண்டும் என்பது கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். மேற்க்கூறபட்டவசனங்கள் நம் ஆத்துமாவின் ஆயத்தத்தை காட்டுகிறது.
இவ்விதமாக நம் ஆத்துமா முழுமையும் ஆயத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மீதிப்பகுதி நாளை. ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.