தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 60:22

சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

முதற்பலனாகிய போஜனபலி நாம் கர்த்தருக்கு செலுத்தும் போது கர்த்தர் செய்யும் செயல்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருக்கு நாம் போஜனபலி செலுத்துவது குறித்து பழைய ஏற்பாட்டின் பகுதியில் தேவன் திருஷ்டாந்தபடுத்துவதின் நோக்கம் என்னவெனில் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நம்முடைய ஆத்துமா பரிசுத்தப்படுத்தி பின்பு அறுவடை செய்து நற்கிரியைகளாகிய நல்ல பலன் மட்டும் தேவனுடைய களத்தில் சேர்த்து பின்பு கர்த்தர் நம்மை தேவனுக்காக பக்குவப்படுத்துவதும், பின்பு நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதுமான காரியங்களை திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் நமக்கு விளக்கிக் காட்டினவைகளை நாம் தியானித்தோம். 

ஆத்துமாவின் அறுவடையாகிய போஜனபலியைக் குறித்து 

லேவியராகமம் 2:13-16

நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனினுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.

முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.

பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது, போஜனபலியானது உப்பினால் சாரமாக்கப்படவேண்டும். உப்பு என்பது தேவ வசனமாகிய கிறிஸ்து.  வசனமாகிய கிறிஸ்துவினால் நம்முடைய ஆத்துமா தேவனுடைய வேலைக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நாம் தேவனுடைய வேலைக்காக சமர்ப்பிக்கப்பட்டால் நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை அத்தனையும் களைந்து விட்டவர்களாக இருக்க வேண்டும். உப்பு போஜனபலியில் குறையவிடாமல் இருக்க வேண்டும் என்றும், உப்பை உடன்படிக்கையின் உப்பு என்றும், படைக்கிற எல்லா படைப்போடும் உப்பை சேர்த்துப்படைக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்னவென்றால் உப்பு வசனமாகிய கிறிஸ்து, நம்முடைய ஆத்மீக வாழ்க்கையில் மிக முக்கியமாக இருக்க வேண்டும்

மேலும் நாம் கிறிஸ்து மூலம் தான் தேவனோடு உடன்படிக்கை எடுக்கிறோம், அதனால் நம்முடைய அனைத்து வாழ்க்கையிலும் கிறிஸ்துதான் நம்முடைய முதற்பலனாக இருக்கிறார். அதனால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவாக இருக்க வேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தமாக இருக்கிறது. அதைத்தான் 

மத்தேயு 5: 2-13

அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது உப்பை கிறிஸ்து, நம்மை குறித்து சொல்கிறதை பார்க்கிறோம்.  எடுத்துக்காட்டாக உப்பானது நம்முடைய ஆகாரத்தில் நாம் எவ்வளவு சுவை விரும்புகிறோமோ அதனை செய்யும். அதனை கர்த்தர் ஆவியின் எளிமையைப் பற்றி சொல்கிறார். ஆவியின் எளிமை இருக்குமானால் அடுத்ததான எல்லா காரியங்களும் உண்டாயிருக்கும். நீதியின்மேல் பசிதாகம், இரக்க குணம்,இருதயத்தில் சுத்தம், சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல், இவையெல்லாம் பரலோகராஜ்யத்தின் அடையாளங்கள். இவைகள் சாரமான உப்புக்கு ஒப்புமைப்படுத்துகிறார்.    

உப்பின் தன்மைகளை நாம் பார்க்கும் போது, அதன் நிறம் பரிசுத்தத்தை காட்டுகிறது. மேலும் அது தண்ணீரில் பட்ட  மாத்திரத்தில் கரைந்து போகிறது. அது எதை காட்டுகிறது என்றால் தண்ணீர் என்பது ஜனங்கள். ஜனங்களுக்காக தன்னைத்தான் தியாகம் செய்த இயேசுவுக்கு அடையாளமாக காட்டுகிறார். மேலும் உப்பானது நம்முடைய ஆகாரத்திற்கு சுவை தருகிறது என்னவெனில் நம்முடைய ஆத்துமாவின் சந்தோஷத்திற்கு வசனமாகிய கிறிஸ்துவின் செயல்பாடுகள் உண்டாயிருக்க வேண்டும்.  

அதனால் தான் கர்த்தர் திருஷ்டாந்தத்தில்கூட  போஜனபலியில் உப்பு  சேர்த்து  சாரமாக்க சொல்கிறார். உப்பானது சாரமற்று போனால் எதினாலும் சாரமாக்க முடியாது . வெளியே கொட்டப்படுவதற்கும் மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமேயொழிய வேறொன்றுக்கும் உதவாது. அதேப்போல் நாம் கிறிஸ்துவோடுக்கூட மரித்து, நம் ஆத்துமா அவருடைய வசனத்தாலும், ஆவியினாலும் உயுர்ப்பிக்கப்பட்டு புது சாயல் தரித்துகொள்ளாவிட்டால்  எந்த பிரயோஜனமுமல்லை, சாரமற்ற உப்பைப் போல தேவசமூகத்திற்கு புறம்பே காணப்படுவோம். என்னவெனில் உப்பானது ஒரு ஆகாரத்தில் நாம் போடும் முன்பாக அந்த ஆகாரம் வெறும் சப்பாக இருக்கும். ஆனால் ஆகாரத்தில் போதுமான அளவு போட்டப்பிறகு அதன் குணமே மாறிவிடும். அப்பொழுது புசிக்க வருகிறவர்கள் எல்லோரும் விரும்புவார்கள்.  

அதேப்போல் நம் வாழ்வில் வசனமாகிய கிறிஸ்துவுக்கு முக்கியம் கொடுத்து எல்லா காரியத்திலும் முன் நிறுத்திக் கொள்வோமானால் நம்மை பார்த்து அநேகர் ஆச்சரியப்படுவார்கள். நம்மை பார்க்கிறவர்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். அப்பொழுது நமக்கு பரலோகத்தில் பலன் மிகுதியாக கிடைக்கும்.  இவ்விதமாக அநேகரை நம்முடைய சாட்சியின் நிமித்தம் கிறிஸ்துவுக்குள்ளாக்கி நாம் நம்முடைய ஆத்துமாவை தேவனிடத்தில் அர்ப்பணிப்பதைக் குறித்து 

லேவியராகமம் 2:14-16

முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி.

பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

இந்த வசனங்களின் விளக்கம் என்னவெனில் நம் ஆத்துமா கிறிஸ்துவினால் வேறு மனந்திரும்புவதற்கேதுவான ஆத்துமாக்களோடு தன்னை முதற்பலனாக தேவசமுகத்தில் செலுத்துதல், முதற்பலனின் போஜன பலி. 

இவ்விதமாக மனந்திரும்புவதற்கேற்ற ஆத்துமாக்களை வசனங்களினால் அவர்கள் உள்ளங்களிலிருக்கிறப் பாரம்பரியமாய் அனுசரித்து வந்த அத்தனை பொல்லாதவைகளை உரிந்து களைந்துப் போட்டு, பின்பு அவர்கள் அபிஷேகம் பண்ணப்படும்படியாக அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களை கர்த்தரிடத்தில் அர்ப்பணிக்கவும் வேண்டும். 

இப்படி தான் ஒவ்வொரு மணவாட்டி சபையும் வளர வேண்டும். இவ்விதம் நாம் யாவரும் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.