தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 10: 32
மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை தேவனோடு ஐக்கியப்படுதலை குறித்து பிறரிடம் சாட்சியாக தெரிவிக்க வேண்டும் - விளக்கம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையை பாவத்தினின்று மீண்டெடுக்கும் படியாக பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியானார் என்பதை பலவித திருஷ்டாந்தத்தோடு நாம் தியானித்தோம். மேலும் அதனைக் குறித்து நாம் தியானிக்கும் போது, தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவினால் நம்முடைய ஆத்தமா மரித்து, பின்பு அவருடைய மரணத்தின் சாயலில் இணைக்கப்பட்டு பின்பு அவருடைய ஜீவனால் நாம் உயிர்ப்பிக்கப்பட்டால், நம்முடைய ஆத்துமாவில் பெலனுக்கு தகுந்த அளவில், பின்பு நாம் சத்தியம் அறிந்தோ அறியாமலோ நாம் பாவத்திற்க்குட்பட்டு பாவஞ் செய்தால் நாம் கர்த்தருக்கு முன்பாக நம்முடைய பாவத்தை அறிக்கைப்பண்ணி நம்முடைய ஆத்துமாவை அர்ப்பணிக்க வேண்டும், என்பதை பல தோற்றங்களில் கூட கிறிஸ்து வெளிப்படுகிறார் என்று தியானித்தோம்.
அல்லாமலும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இவ்வித சாட்சியான ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில்; மேற்க்கூறப்பட்ட ஆணையை கேட்டிருந்தும், தான் கண்டதையும், அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால் அவன் தன் அக்கிரமத்தை சுமப்பான்.
லேவியராகமம் 5:1
சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது, நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால் கூறபட்ட தேவனுடைய வார்த்தை பிரகாரம் நம்முடைய வாழ்க்கையில் நாம் அறிந்தும், அனுபவித்தும் இருக்கிற தேவனுக்குரிய சாட்சிகளை மற்றவர்களுக்கு தெரிவியாமல் இருப்பது பாவம் என்பதையும், அவன் அக்கிரமத்தை சுமப்பான் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேவனுக்குரிய உண்மையான சாட்சியாக வாழ்ந்தால் நம்மை தேவன் உயர்த்துவார் என்பது நிச்சயம்.
அநேகமாக நம்மெல்லாருக்கும் தெரிந்த ஒரு காரியம் சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபன், அவன் பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், நியாயபிரமாணத்தின்படி பரிசேயன், பக்தி வைராக்கியத்தின் படி சபையை துன்பப்படுத்தினவன். இந்த சவுலை, தேவனுடைய பிள்ளைகளை துன்பப்படுத்தும்படியாக பிரதான ஆசாரியனிடத்திலிருந்து நிருபங்களை வாங்கிக்கொண்டு தமஸ்குவுக்கு போகும் வழியில் கர்த்தர் அவனை சந்திக்கிறார். கர்த்தர் அவனை சந்தித்து, அவன் கர்த்தருக்காக தைரியமான சாட்சியாக எழும்புகிறதை வாசிக்க முடிகிறது. அவன் கர்த்தருக்காக திட சாட்சியோடு வாழும்போது பலவிதத்திலும் நெருக்கப்படுகிற விதத்தை பார்க்கிறோம். அவ்விதமான நெருக்கத்தில் கர்த்தர் அவனை கைவிடாதபடி பாதுகாத்து, அவனை பராமரித்து, கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறார்.
மேலும் சவுல் சேனாபதியினிடத்தில் தான் பார்வையடைந்ததையும் கர்த்தர் அவனோடே சந்தித்து பேசின காரியங்களை சொல்கிறான். என்னவெனில்
அப்போஸ்தலர் 22:10-18
அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.
அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,
என்னிடத்தில் வந்து நின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக்கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய்.
இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
இந்த வசனங்களை நாம் தியானிக்கும்போது நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்து சகல மனுஷருக்கு முன்பாக அவருக்கு சாட்சியாயிருப்பாய் என்று கர்த்தர் பவுலோடு சொன்னதை சேனபதியோடு சொல்கிறதை பார்க்கிறோம். அல்லாமலும் அப்போஸ்தலனாகிய பவுல் அகிரிப்பா ராஜாவிடத்திலும், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்கிறான். எப்படியெனில்
அப்போஸ்தலர் 26:11-16
சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியபட்டணங்கள் வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,
மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
இங்கு நாம் வாசிக்கும் போது கர்த்தர் பவுலுக்கு கொடுத்த பரம தரிசனம் கர்த்தரின் ஊழியக்காரனாகவும், அவருக்கு சாட்சியாகவும் ஏற்படுத்துவதற்காகவே என்பது புரிகிறது.
அப்போஸ்தலர் 26:20-22
முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.
பிரியமானவர்களே இவ்விதமாக நாம் தேவ அனுக்கிரகம் பெற்று தேவனுக்குரிய சாட்சியாக வாழுகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம். அல்லாமலும் 1யோவான் 1:1-4
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
இவ்விதமாக நாமும் கண்டும், அறிந்தும், கேட்டும் இருக்கிற ஜீவ வார்த்தையை குறித்தும், நாம் தேவனோடு இருக்கிற ஐக்கியத்தை மற்றவர்களுக்கும் சாட்சியாக சொல்லுவோமானால் நம் சந்தோஷம் நிறைவாயிருக்கும். பிறருக்கு முன்பாக நாம் தேவனிடத்தில் உள்ள ஐக்கியதைக்குறித்து சாட்சி எடுத்துரைக்காவிட்டால், அந்த அக்கிரமத்தை நாமே சுமப்போம் என்று தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது.
ஆகையால் தேவனுடைய சாட்சிகளை மக்களிடத்தில் தெரிவிக்காவிட்டால் , இப்போதே நாம் குறைகளை கர்த்தரின் சந்நிதியில் பாவ அறிக்கைப்பண்ணி ஸ்தோத்திரபலியோடே அவரிடத்தில் ஒப்புக் கொடுத்து நிறைவான சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.