தேவனுக்கே மகிமையுண்டாவதாக

II பேதுரு 2: 20

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலுயா.

கர்த்தரின் சுதந்தரமும், கர்த்தரின் காணியாட்சியுமாக மணவாட்டி சபை ஆக வேண்டுமானால், உலகமாகிய  அசுத்தங்களால் தீட்டுப்படாதபடி நம்மை பாதுகாக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், 

லேவியராகமம் 5:2,3

அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.

அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான்.

இந்த வசனங்கள் என்ன சொல்கிறதென்றால் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் சுத்தமாக்கப்பட்ட ஒரு ஆத்துமா எந்த அசுத்தத்தையும் தொடக்கூடாது என்பது தான் அதன் பொருள். மேலும் தீட்டுப்பட்ட ஒரு மனுஷனை அறியாமல் தொட்டால், பின்பு அறிந்துக் கொண்டால் அவன் குற்றமுள்ளவனாவான். 

ஏசாயா 52:11

புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

இந்த வசனம் நாம் தியானிக்கும் போது புறப்படுங்கள் புறப்படுங்கள் என்று கர்த்தர் சொல்கிறாரென்றால், நம்முடைய பரலோகமாகிய கானானுக்கு நேராக நம்முடைய விசுவாச யாத்திரையை குறித்து சொல்கிறார். இந்த யாத்திரை எப்போது துவங்குகிறது  என்றால், நம்முடைய ஆத்துமா பாரம்பரிய பாவத்தினால் மரித்திருக்கும் போது நம்முடைய ஆத்மீக கண்கள் அடைப்பட்டிருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் நம்முடைய பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்படும் போது மரித்து கிடந்த நம்முடைய ஆத்துமா ஜீவனோடு எழும்பி, நம்முடைய ஆத்துமாவின் கண்கள் திறக்கப்படுகிறது.  நம்முடைய ஆத்துமா ஜீவனோடு எழும்பும் போது அந்த ஆத்துமா தான் சீயோன். 

நாம் சீயோன் நகரமாக மாற வேண்டுமானால் சீயோனாகிய கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய ஆத்துமாவிற்குள்ளும் தம்முடைய ஜீவனை அனுப்பி, அந்த ஆத்துமா மரித்தோரிடத்திலிருந்து எழும்புகிறது. அவற்றைக்குறித்துதான் கர்த்தர் சொல்வது 

ஏசாயா 52:1-3

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

வசனங்கள் என்ன  சொல்கிறதென்றால் கிறிஸ்துவினால் எழுப்பப்பட்ட ஆத்துமா அவருடைய வல்லமையை தரித்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் கிறிஸ்துவின் வல்லமையை  தரித்துக் கொள்ள, அவருடைய வசனங்கள் தவறாமல் கைக்கொண்டு நடக்க வேண்டும். அவ்வாறு வசனங்கள் கைக்கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நாம் உலகமாகிய அசுத்தங்களுக்கு தப்பினவர்களாக பரிசுத்தமாக மாற முடியும். 

அப்படியானால் நம்முடைய அலங்காரம், பரிசுத்தம். அதனால் தான் கர்த்தர் சொல்லுகிறார் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை தொழுதுக்கொள்ளுங்கள். பரிசுத்தமானது மொத்தமாக முழு பரிசுத்தம் ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியாது.  அதன் காரணம் என்னவென்றால் கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. மேலும் கர்த்தருடைய வசனங்களில் உள்ள சத்தியங்கள் மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டிருக்கிறது.  இதன் ஆழங்களை அறிந்துகொள்வது சுலபமான காரியமல்ல. அவற்றை  அறிந்து கொள்ள உலகத்தை ஜெயித்த கிறிஸ்துவோடு மிகவும் ஐக்கியப்பட்டு, நாமும் அவரை போல உலகத்தின் சகல சுகபோகங்களை வெறுத்து தேவனே தஞ்சம் என்று இருந்தால் நமக்கு மறைந்து இருக்கிற சத்தியத்தை வெளிப்படுத்துவார். 

அப்போது ஒவ்வொரு நாளிலும் பரிசுத்தத்தில் வாழுவோம். அப்படி ஒவ்வொரு நாளிலும் பரிசுத்த வஸ்திரத்தை உடுக்க வேண்டும். அதைத்தான் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்திக்கொள் என்று கர்த்தர் சொல்கிறார். அப்படியிருப்போமானால் சத்துரு நம்முடைய விசுவாச யாத்திரையில் நம்முடைய உள்ளத்தை வஞ்சிக்கமாட்டான். அதற்குதான் கர்த்தர் சொல்கிறார்; விருத்தசேதனமில்லாதவனும், அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.  

மேலும் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் தூசியை உதறிவிட்டு எழுந்திரு. உலகமும் உலகத்திலுள்ள யாவையும் குறித்து தேவன் தூசி என்கிறார். அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கிறிஸ்துவை மட்டும் பின்பற்றி வாழுவோமானால் கர்த்தர் நம்மை முழுமையும் மீட்டுக்கொள்கிறார்.  நம்மை மீட்டுக்கொண்டபின் நாம் உலகமாகிய எந்த அசுத்தங்களையும் தொடக்கூடாது என்று சொல்கிறார்.  

பிரியமானவர்களே, இதனை வாசிக்கிற அன்பானவர்களே, அநேகம் பேர் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட பிறகு சத்தியத்தின் ஆழங்கள் தெரியாததினால் மீண்டும் உலகமாகிய அசுத்தங்களில் சிக்கி விடுகிறார்கள்.  ஆதலால் இந்த வார்த்தைகளை தியானிக்கிற யாவரும் தங்கள் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து தேவ சத்தத்திற்க்கு கீழ்படிவோமனால்  கர்த்தர் நமக்கு நித்திய இரட்சிப்பை அருளுவார். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதன் அடையாளமாக 

லூக்கா 9:57-62  

அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.

பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

இவற்றின் கருத்துக்களை நாம் பார்க்கும் போது உலகமாகிய அசுத்தத்தை தொட்டவன் அசுத்தன் என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவன் அவனுக்குள் வாசம்பண்ணமுடியாது என்பதற்காகவே சீஷனில் ஒருவன் உம்மை பின்பற்றி வருவேன் என்றபோது இயேசு சொல்கிறார்; நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்கிறார்.  பின்பு சீஷர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண உத்தரவு கொடும் என்றான், அதற்கு இயேசு மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ போய் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பிரசங்கி என்று சொல்கிறார்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படாமலிருந்தால், அவர்களுக்குள் ஜீவன் இல்லை. அப்படி ஜீவன் இல்லாதவர்கள் மரித்தவர்கள். அப்படி ஜீவன் இல்லாதவர்கள் மரணமடைந்தால் அவர்கள் அருவருப்பானவர்கள், தீட்டானவர்கள், அசுத்தமானவர்கள். அவர்களை தொடுகிறவர்களும் தீட்டாவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அதற்கு தான் மேற்க்கூறிய வசனங்கள் கூறப்படுகிறது. 

அல்லாமலும் இதன் விளக்கம் என்ன கூறுகிறதென்றால் எசேக்கியல் 44:25-28

தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படலாகாது.

அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும்.

அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிற நாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி, என்று கர்த்தர் சொல்கிறார்.

இந்த வசனங்கள் நமக்கு தேவன் தந்த பிரமாணம்.  இவற்றில் எல்லாம் நாம் ஒழுங்காக கடைப்பிடிக்கவேண்டும். அப்படி நாம் சரியாக கைக்கொண்டால் மட்டுமே கர்த்தர் நம்மோடு வாசம்பண்ணுவார். மேற்க்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சவத்தை தொட்டதால் தீட்டுபட்டிருப்போமானால், நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும். அப்படி சுத்திகரிக்கப்பட்ட பின்பு ஏழு நாள் கழிந்து தான் பரிசுத்தஸ்தலத்தின் உட்பிரகாரத்திற்குள் சென்று பாவ அறிக்கை செய்து கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரித்து, தேவனுடைய சுதந்தரராக வேண்டும்.  தேவனே நம்முடைய சுதந்தரம். அவரே நம்முடைய காணியாட்சி.  இவ்விதம் நாம் யாவரும் தேவனுக்கு சுதந்தரராகும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.