தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதி 4: 26, 27
உன் கால்நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக..
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை மனம்பதறி தேவசமூகத்தில் பேசினால் பாவம், மீண்டும் சுத்திகரித்தல்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சுதந்தரமும், அவருடைய காணியாட்சி என்பதையும், அவ்விதம் நாம் ஒவ்வொருவரும் இருக்கவேண்டுமானால், நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான உலக அசுத்தங்களையும் நாம் தொடாதபடியும், அவைகளால் நம்மை தீட்டுப்படுத்தாதபடியும் நம்மை காத்துக்கொண்டால் மட்டுமே நாம் கர்த்தருக்கு சுதந்தரராக முடியும்.
அடுத்தப்படியாக நாம் தியானிப்பது
லேவியராகமம் 5:4
மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
இந்த வசனத்தை நாம் தியானிக்கும் போது அநேக மக்கள் தங்கள் வாழ்க்கையில் நெருக்கங்களும்,கஷ்டங்களும் வரும் போது மனம் பதறுகிறார்கள். அவ்விதமாக மனம் பதறுகிறபோது ஏதாவது ஆணையிட்டு கொள்கிறதை பார்க்கிறோம். இவ்வித ஆணையிடுதல் நிமித்தமாக ஒருவன் தீமை செய்கிறதற்காவது, நன்மை செய்கிறதற்காவது தன் மனம் அறியாமல் தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துக் கொண்டால் அவன் பாவமென்று அறிந்துக்கொண்டால் கட்டாயமாக பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவனுடைய வசனம் சொல்லுகிறது.
என்னவெனில் பிரசங்கி 5:1-7
நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.
தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.
தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும்.
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச்செய்.
நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே, தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?
அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு.
இந்த வசனங்களை தியானிக்கும் போது, நம்முடைய நடையை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். தேவாலயத்திற்கும் போகும் போதும் வரும் போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மிடத்தில் குறைகளை வைத்துக்கொண்டு தேவனுக்கு பலியடுகிறதை காட்டிலும், செவிக்கொடுப்பதே நலம். தேவ சமூகத்தில் துணிகரமாய் எதையும் வாயால் பேசக்கூடாது என்றும் மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாது என்றும் தேவன் கூறுகிறார். ஏனென்றால் தேவன் வானத்திலிருக்கிறார், நாம் பூமியிலிருக்கிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தேவன் சொல்வது நாம் தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால் அதை செலுத்த தாமதியாதே என்று சொல்கிறார். ஏனென்றால் அநேகர் வாழ்க்கையில் தேவ சத்தம் கேட்டு கீழ்ப்படியாததினால் நெருக்கங்கள் வரும் போது கர்த்தருடைய சத்தம் கேட்டேன் என்று சொல்லி பொருத்தனை பண்ணி விடுவார்கள். அப்படிபட்டவர்களை குறித்து தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டிருக்கிறது தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுப்போல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். ஆனால் கர்த்தர் சொல்வது நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால் அதை செலுத்த தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிற தேவன் அல்ல.
நாம் நேர்ந்துக்கொண்டோமானால் அதனை கட்டாயம் செய்ய வேண்டும். அதனை செய்யாமல் இருந்து விட்டு புத்தி பிசகினால் வந்தது என்று தூதனுக்கு முன்பு சொல்லாதே. அப்படி நாம் சொன்னால், நம்முடைய வாயின் வார்த்தைகளால் நம்முடைய கைகளின் கிரியைகளை அழித்து விடுவார்.
பிரியமானவர்களே, இந்த காரியத்தை தியானிக்கும் போது நாம் இவ்விதமாக வழி தப்பி நடக்கிறோமென்றால், இப்பொழுதே நாம் பாவ அறிக்கையிட்டு, நம்மை முழுமையும் ஒப்புக்கொடுத்து பலியான ஆட்டுகுட்டியானராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்படுவோம்.
அல்லாமலும் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை மோசே ஆரோன் என்பவர்களை வைத்து எகிப்திலிருந்து நடத்தி வரும்போது வழியில் சீன் வனாந்தரத்தில் சேர்ந்த போது தண்ணீர் இல்லாதிருந்தது. அதனால் ஜனங்கள் மிகவும் முறுமுறுத்தார்கள். மோசேயும் ஆரோனும் ஆசரிப்பு கூடார வாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்கு காணப்பட்டது. கர்த்தர் மோசேயினிடத்தில் நீயும், ஆரோனும் சபையை கூடி வர செய்து கையிலிக்கிற கோலை எடுத்து கன்மலையை பார்த்து பேசுங்கள், அப்பொழுது கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வரும். அப்பொழுது, சபையாருக்கும் மிருக ஜீவன்களுக்கும் தண்ணீர் குடிக்க கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தன் கையிலிருந்த கோலை எடுத்து கன்மலையை இரண்டு தரம் அடித்தான்.
எண்ணாகமம் 20:11-13
தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.
இவ்விதம் கர்த்தர் மோசே ஆரோன் என்பவர்களிடத்தில் கன்மலையை பார்த்து பேசுங்கள் என்று சொன்னதற்கு, தன் கையை ஓங்கி கன்மலையை இரண்டு தரம் அடித்தான். ஆனால் தண்ணீர் தாராளமாய் கிடைத்தது. ஆனால் கர்த்தர் மோசே ஆரோன் என்பவர்களிடத்தில கோபமானார். ஆனால்
சங்கீதம் 106: 32,33
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
இங்கு நாம் தியானிக்கும்போது இஸ்ரவேலர்; அவன் ஆவியை, தண்ணீர் கிடைக்காமல் இருந்ததால் விசனப்படுத்தினார்கள், அதனால் தன் உதடுகளால் பதறி பேசினான் என்று சொல்லப்படுகிறது. அது மோசேக்கு பொல்லாப்பாயிருந்தது, என்று தேவ வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆதலால் பிரிய ஜனமே, நாம் பதறி பேசினாலும் கனமலையாகிய கிறிஸ்துவை அடிப்பதற்கு சமமாக்குகிறார். ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம்மளில் யாராவது தேவனுடைய செயலுக்கு மாறாக பதறி வார்த்தைகள் சொல்லியிருப்போமானால் இப்போதே நமக்கு எவ்வளவு ஆத்மாவின் பலன் இருக்கிறதோ அத்தனையும் தேவ சமூகத்தில் பலியாக்கி நம்மை அவருடைய இரத்தத்தால் சுத்திகரித்து கர்த்தரிடத்திலிருந்து மன்னிப்பு பெற்று மீண்டும் மனந்திரும்பி நம்மை முழுமையும் கர்த்த ரிடத்தில் ஒப்படைப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.