தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 139: 24
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை பரிசுத்த ஸ்தலத்திலுள்ள வஸ்துக்களாகிய பொருட்கள் பாதுகாத்தல் என்பது கிறிஸ்துவின் கிருபைகள் சேதப்படாமல் பாதுகாப்பதற்கான திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை தேவ சமூகத்தில் மனம் பதறி தன் உதட்டினால் பேசினால் அது பாவம் என்றும், அவ்வாறு மனம் பதறி பொருத்தனை பண்ணி, பின்பு செலுத்தாமல் யோசனை பண்ணினாலோ அது பாவம் என்றும், அந்த பாவத்திற்காக, நம்மை முழு பலத்தோடும, முழு மனதோடும் முழு இருதயத்தோடும்., தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருக்கு ஸ்தோத்திரபலியை செலுத்தி நேர்ந்துக்கொண்டதைச் செய்வோமானால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும் என்பதை நாம் நேற்றைய தினம் தியானித்தோம்
மேலும் லேவியராகமம் 5:14-16
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
இந்த வசனங்கள் என்ன சொல்கிறதென்றால் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம் செய்து, அறியாமையினால் பாவஞ் செய்தால், என்று எழுதப்பட்டிருக்கிறது என்னவென்றால் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிற பொருட்கள் அல்லது பரிசுத்த வஸ்துக்கள் இவைகளில் யாராவது குற்றஞ்செய்து, அவ்விதம் குற்றம் செய்வது என்பது பரிசுத்தம் இல்லாமல் அவைகளை தொட்டாலோ அல்லது ஏதாவது நஷ்டப்படுத்தினாலோ அது பாவத்திற்குரியதாயிருக்கிறது.
அவ்விதம் பாவம் வருவதற்குரிய குற்றம் செய்ததினால் பரிசுத்த ஸ்தலத்து சேக்கல் கணக்கின்படி, அவ்வளவு வெள்ளி சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுகடாவைக் கொண்டு வந்து கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமானதைக் குறித்து தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தை செலுத்தி, அதிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய் கூட்டி ஆசாரியனுக்கு கொடுப்பானாக. அப்பொழுது ஆசாரியன் அந்த பாவத்திற்காக ஆட்டுகடாவினால் பாவ நிவிர்த்தி செய்யும் போது அந்த பாவம் மன்னிக்கப்படும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
பிரியமானவர்களே நாம் தியானித்துக்கொண்டிருக்கிற வேதப்பகுதியானது, மிக முக்கியமாக சிந்திக்க வேண்டிய பகுதி என்னவென்றால் பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிற எந்த ஒரு பொருட்களோ அல்லது பாடல் புஸ்தகம், பரிசுத்த வேதாகமம் மற்றும் இசைக்கருவிகள் இவைகளை அநேகர் நிர்விசாரமாக கருதி விடுவார்கள். என்னவெனில் தங்கள் சிறு குழந்தைகள் எடுத்து விளையாடும் போது காணாதவர்கள் போல் இருந்து விடுவார்கள். அதற்கு எந்த பொறுப்பும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
மேலும் அநேக தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய முதியோர்கள் அதில் அக்கரை காட்டாமல் தங்கள் குழந்தைகளை தெய்வம் என்று நினைத்து பரிசுத்தமான பொருட்களை பிள்ளைகளிடத்தில் விளையாடக் கொடுத்து விடுவார்கள். பிள்ளைகள் அதனை தாறுமாறாக, துண்டு துண்டாக கிழித்தாலும் கண்டுக்கொள்ளமாட்டார்கள். இது பாவம் என்று உணராதவர்களாக காணப்படுவார்கள். அதனால் அவர்கள், தேவன் சுமத்துகிற அக்கிரமத்தை அறியாமல் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் நினைக்கிறார்கள், பிள்ளைகள் தவறு செய்தால் பாவம் இல்லை என்று நினைக்கிறார்கள்.
ஆனால் எரேமியா 22:21-27
நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.
லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில் நீ எவ்வளவு, பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்;
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநநபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
மற்றும் ஒலிப்பெருக்கி, ஒலிப்பதிவு, ஓளி பதிவு இவைகளை கையாளுகிறவர்களும், நிர்விசாரமாக கையாண்டால் அது பாவத்திற்குரிய குற்றம் தான். அவர்கள் மேலும் கர்த்தர் அக்கிரமத்தை சுமத்துகிறார். அல்லாமலும் பாய் கிழித்தல், பானபாத்திரங்கள் கழுவுதலில் குறைகள், பான பாத்திரங்கள் உடைத்தல் , இவ்விதமாக பரிசுத்த ஸ்தலத்தின் எந்த ஒரு வகைகளில் நஷ்டங்கள் வந்தாலும், அதற்கு அபராதமாக ஐந்தில் ஒரு பங்கு ஆசாரியனாகிய கிறிஸ்துவுக்கு காணிக்கையாக செலுத்துவதும் மற்றும் முதலீட்டுக்கு சமமாக ஆட்டு குட்டியானவரின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து, நம்முடைய ஆத்துமாவை தேவனுக்கு ஸ்தோத்திர காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும். அப்பொழுது அந்த பாவம் மன்னிக்கப்படும்.
அவற்றைக்குறித்து நாம் இந்த நாட்களில் அநேகமாக சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அநேகர் தங்கள் வாழ்க்கையில் எந்த சமாதானமும் இல்லாமல் இருக்கும் போது ஏன் இவ்விதம் நடக்கிறது என்று தெரியாமல் இருப்பார்கள். இவ்விதமான பாவங்கள் வாழ்வில் இருக்கிறது என்று தெரியாமல் இருக்க காரணம் தேவனுடைய சத்தியம் அவர்களில் வெளிப்படாததாலும், மறைந்து இருக்கிற பாவங்களை அவர்கள் காணும்படி மனகண்கள் திறவாததினால் தாங்கள் விரும்பின பிரகாரம் நடந்து, பாதாளத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்களோடுக்கூட கிடத்தப்பட்டு அழிந்து போகிறார்களே.
இதனை தேவன் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், மணவாட்டி சபையாகிய நமக்கு தேவன் தந்த கிருபைகளை அலட்சியம் செய்கிறவர்களுக்கு. ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே, நம்மிடத்தில் என்ன குறைகள் தேவ சந்நிதியில் செய்தோம் என்று நாம் ஒவ்வொருவரும் அலசி ஆராய்ந்து நம்மை முழுமையும் பலிபீடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.