தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 25: 23

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.    அல்லேலுயா.

மனவாட்டி சபை அயலான் பொருட்கள் மீது ஆசை வைக்கக்கூடாது

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், பரிசுத்த ஸ்தலமாகிய ஆசரிப்பு கூடாரத்தில் பரிசுத்தப் பொருட்களை மணவாட்டி சபையாகிய நாம் அறியாமையின் காரணமாக நஷ்டத்திற்குட்படுத்தியிருந்தால் அதே சம அளவுக்காக ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டவர்கள், தாங்கள் பெற்றிருந்த ஆத்துமாவின் பெலன் எவ்வளவு காணப்பட்டதோ அத்தனையும் தேவ சமூகத்தில் அர்ப்பணித்து, தங்களில் வந்துபோன பாவத்திற்காக மீண்டும் பாவ அறிக்கைச் செய்து புதுப்பித்து, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கபட வேண்டும் என்றும், மேலும் தாங்கள் நஷ்டபடுத்தின பொருட்களின் விலை அளவில் ஐந்தில் ஒன்று அபராதமாக கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும் என்பதையும், கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துவதின் காரணமென்னவென்றால் நமக்கு தேவன் தந்த கிருபையை அலட்சியமாக்குகிறவர்களுக்கு, தலையில் அக்கிரமத்தை சுமக்க வைக்கிறதையும், மீண்டும் அவர்கள் புதிதாக்கி சுத்திகரிக்கபட வேண்டும் என்பதையும் தியானித்தோம்.

    ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கபோகிற காரியம் என்னவென்றால்

லேவியராகமம் 6:1-7

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து,

அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.

கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

கர்த்தர் மோசேயினிடத்தில் சொல்கிறார், ஜனங்களுக்கு சொல்லும்படியாக கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, மற்றும் அயலான் யாராவது நம்மிடத்தில் ஏதாவது பொருட்களை ஒப்படைத்து இருந்தாலோ, கொடுத்தல், வாங்கலிலோ ஏதாவது நாம் மாறாட்டம் பண்ணினால், அல்லது வஸ்துகளை பலாத்காரமாக பறித்துக்கொண்டாலோ,அவ்விதம் அயலானுக்கு இடுக்கண் செய்து அல்லது காணாமற் போனதை கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்து பொய்யாணையிட்டு, இவை முதலான காரியத்தில் பாவஞ்செய்தால், இந்த பாவத்தினாலே அவன் குற்றவாளியானதால்  அவன் எவ்விதத்தில் எல்லாம் தேவனுக்கு அநியாயம் செய்யும்படியாக அயலானுக்கு இடுக்கண் செய்து, பலாத்காரமாகவும், பொய்யாணையிட்டும் சம்பாதித்த பொருளை அப்படியே திரும்ப கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல முதலை திரும்ப கொடுக்கிறதும் மற்றும் அதனோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக க் கூட்டி, தான் செய்தது பாவம் என்று தனக்கு தெரிய வரும்போது, யாராக இருந்தாலும் பாவ அறிக்கை செய்ய வரும் போது, அதற்க்குரியவனுக்கு திரும்ப கொடுக்க வேண்டும்.  

மேலும் நாம் செய்த குற்றத்திற்காகவும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டு பாவ அறிக்கை செய்து மன்னிப்புக் கேட்டால் கர்த்தர் மன்னிக்கிறவர். பிரியமானவர்களே நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாம் உற்றுப் பார்த்து நியாயந்தீர்த்து, நம்மை செம்மைப்படுத்துகிற தேவனாயிருக்கிறார்.  

மேலும் கர்த்தர் இவ்விதமாக திருஷ்டாந்த படுத்துவதின் காரணம் என்னவென்றால்  

லூக்கா 16: 9-13

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது அநீதியான உலகப்பொருட்களால், நாம் சிநேகிதர்களை சம்பாதிக்க  வேண்டும்.  மேலும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்போது பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக என்பது நியாயப்பிரமாண கடட்டளையாக  இருக்கிறது.  மேலும் அயலானுக்கு தீங்கு ஒன்றும் செய்யக் கூடாது.  நாம் எப்போதும் அயலானுக்கு முன்பு தேவனுக்குரிய சாட்சிகளாக இருக்க வேண்டும்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறதாவது அநீதியான உலகப் பொருளில் உண்மையாகயிருந்தால் தான் தேவன் நம்மை நம்பி மெய்யான பொருளாகிய பரலோகப் பொருளை ஒப்புவிப்பார்.  பரலோக பொருள் என்பது வசனமாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவன்.  

    பின்னும் கிறிஸ்து சொல்லுகிறது என்னவென்றால் வேறொருவனுடைய காரியத்தில் உண்மையாயிராவிட்டால் உங்களுக்கு யாதொன்றை சொந்தமாக கொடுப்பவன் யார்?  ஆதலால் பிறர் பொருள் மேல் எவ்விதத்திலும் ஆசை வைக்கக் கூடாது, அப்படி செய்தால் அது தேவனுக்கு செய்கிற அநியாயம். 

ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே, இப்படிப்பட்ட அநியாயம் யாரிடத்திலாவது உண்டாயிருந்தால் தேவன் நமக்கு தந்திருக்கிற பிரமாணங்களுக்கு கீழ்படிந்து அப்படியே திருப்பி கொடுத்து மீண்டும் நம்முடைய ஆத்துமாவை முழுமையும் பலிபீடத்தில் அர்ப்பணித்து கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரித்து மன்னிப்பு பெற்றுக்கொள்வோம். ஒப்புக்கொடுப்போம்.        

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.