தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 29: 11

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மனவாட்டி சபை தேவனுடைய வார்த்தையாகிய அக்கினியால் எப்பொழுதும் பற்றி எரிய வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையானது அயலானுடைய எந்த வஸ்துக்களையோ, பொருட்களையோ பலாத்கரமாக பறித்துக் கொள்ளக்கூடாது என்றும், அவர்களுக்கு விரோதமாக மாறாட்டம் பண்ணாமலும், இடுக்கண் உண்டாக்காமலும் இருக்க வேண்டும் என்றும், மணவாட்டி சபை தேவனுக்கு அநியாயம் செய்யாமல், அயலானுக்கு முன்பாக நாம் சாட்சியாக இருக்கவேண்டும் என்றும் தியானித்தோம்.  இவைகளுக்கு மாறாக யாராவது அயலானுடைய காரியத்தில் தேவனுக்கு அநியாயம் செய்திருந்தால் தேவன் நியாயப்பிரமாணத்தில் நமக்கு கற்பித்திருக்கிற கட்டளைகளின் படியே முதலோடுக்கூட ஐந்தில் ஒருபங்கு கூட்டிக்கொடுத்து மீண்டும் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் சுத்திகரிக்கபட்டால் பாவமன்னிப்பாகிய மீட்பைப்பெற்றுக் கொள்ளமுடியும். 

இவ்விதம் பாவத்தினின்று மீட்கப்பட்டபிறகு 

லேவியராகமம் 6: 8-13

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

கர்த்தர் மோசேயிடம் சொல்கிறது என்னவென்றால் ஆசாரியத்துவம் உள்ளவர்கள், கர்த்தருக்குரிய பிரமாணம் என்னவென்றால் பலிபீடம் இராமுழுவதும் எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். இதின் விளக்கம் என்னவென்றால் பலிபீடமாகிய கிறிஸ்து நம்முடைய இருதயமாக இருக்க வேண்டும். முழு இருதயமும் தேவனுடைய வார்த்தையாகிய அக்கினியால் முழுமையாக எரிந்துக்கொண்டிருக்க வேண்டும். நாம் செலுத்துகிற ஸ்தோத்திர பலியானது அக்கினியாக இருக்க வேண்டும். ஆனால் ஆசாரியத்துவம்  செய்கிறவர்கள் 

லேவியராகமம் 6: 10

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

சணல் நூல் அங்கியை தரிக்க வேண்டும்.   மேலும் வேத வசனம் திருஷ்டாந்தத்தோடு விளக்கப்பட்டிருக்கிறது. மற்றும் சணல்நூல் அங்கி என்பது ஆவியின் எளிமையைக்காட்டுகிறது. சணல் நூல் ஜல்லடையை அரையில் கட்டுவது சத்திய வசனத்தை காட்டுகிறது. இவ்வித வார்த்தைகளால் பலிபீடம் எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய இருதயத்தில் தேவனுடைய கட்டளைகளாகிய விளக்கு எப்போதும் உண்மையான சத்தியத்திற்கு கீழ்ப்படிந்தவர்களாக கிரியைகளினாலே பிரகாசிக்க வேண்டும். 

அல்லாமலும் நம் தப்பிதங்களை அறிக்கை பண்ணி விட்டால் நம் மனதை கிறிஸ்துவின் புது உடன்படிக்கையினால் நம்மை ஒவ்வொரு நாளும் புதிதாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்விதம் நம்முடைய சாட்சியை புதுப்பிக்க வேண்டும்.  மண்ணாகிய உலகம் உள்ளத்தில் வந்தால் விளக்கு அணைந்து  போவதற்கு ஏதுவாகி விடும்.  அதனால் நாம் அனுதினம் இரட்சிக்கப்பட வேண்டும்.  பழைய பாவ சிந்தைகளை அப்படியே விட வேண்டும்.  

அல்லாமலும் பலிபீடத்தின் அக்கினி அவியாமல் எரிந்துக்கொண்டிருக்க வேண்டுமானால் நாம் அனுதினம் காலையில் தேவனுக்கு ஆராதனை செலுத்தி பாவ அறிக்கையிட்டு அதன் பின் சமாதானத்திற்குரிய  காரியங்களை கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பலிபீடமாகிய இருதயத்தில் தேவனுடைய வார்த்தையாகிய அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.அவ்விதம் நாம் காணப்படுவோமாகில் நம்முடைய இருதயத்தில் வருகிற வேண்டாத சிந்தனைகள் எல்லாம் கர்த்தர் சுட்டெரிப்பார். பாகால் பலிபீடம் கட்டாதபடி நம்மை பாதுகாக்க முடியும்.  நாம் பரிசுத்தமாக வாழமுடியும்.  

அவ்விதம் நாம் பரிசுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது, போஜன பலி தேவனுக்கு செலுத்த வேண்டும்.  போஜனபலி என்பது தேவனுடைய கிரியை செய்து முடிப்பதே  போஜனம். போஜனபலியின் பிரமாணம் 

லேவியராகமம் 6:14-18  

போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.

அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் 

ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

இவை என்னவென்றால் நம்முடைய ஆத்துமா தேவனுடைய வசனம் நன்றாக உட்க்கொண்டு, பின்பு அதனை நாம் நன்றாக மென்று அதிலிருந்து தோன்றுகிற எண்ணெய் தான் கிறிஸ்துவின் அபிஷேகம்.  அந்த அபிஷேகத்தில் தான் நாம் ஆத்மாவில் நிறைந்து தேவனை ஆராதிக்க வேண்டும். அதற்கு திருஷ்டாந்தப்படுத்தியது தான் மேற்க்கூறிய வசனங்கள்.  

இவ்விதம் நாம் ஆத்மாவில் ஆராதிக்கும் போது நம்முடைய செயல்பாடுகளில் பாரம்பரிய செயல்கள் எல்லாம் நாம் களைந்து, பின்பு புதிய உடன்படிக்கையாகிய கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் நம்முடைய பாவங்கள் போக கழுவப்பட்டு தேவனை ஆராதிக்க வேண்டும். இவ்விதம் நாம் புதிய சாயல் தரித்து தேவனை மகிமைப்படுத்தும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.