தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 8:51
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாசாகாமல் பிழைத்திருப்பதற்கான திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாம் கர்த்தரின் சந்நிதியில் முழுமையும் (ஆவி, ஆத்துமா, சரீரம்) ஒப்புக்கொடுத்து நம்முடைய அனைத்து பாவங்கள், சாபங்கள், அக்கிரமங்கள், மீறுதல்கள், குற்றங்குறைகள் எல்லாவற்றையும் கர்த்தருக்கு முன்பாக அறிக்கையிட்டு, எல்லாவற்றையும் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் கழுவி சுத்திகரித்து பின் அனுதினம் கர்த்தருக்கு ஆராதனை செய்து, அவ்விதம் ஆராதனை செய்யும் போது, தேவனுக்கு அனுதினம் ஸ்தோத்திர பலி செலுத்த வேண்டும். அவ்விதம் ஸ்தோத்திர பலி செலுத்தும் போது பரிசுத்த உள்ளத்தோடு செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அவ்விதம் பரிசுத்த உள்ளத்தோடு தேவனுக்கு ஆராதனை செய்யும்போது உலக இன்பங்களை எல்லாம் விட்டுவிட வேண்டும். அப்படியானால் மட்டுமே கர்த்தர் நம்மை மணவாட்டி சபையாக அங்கீகரிப்பார். பின்பு நம்மை நாம் தேவனுக்காக முழுமையும் பிரதீஷ்டிப்போமானால் தேவனுடைய வீடாகுவோம் என்று தியானித்தோம். நாம் தேவனுடைய வீடாயிருப்போம் என்பதனை கர்த்தர் தாவீதை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
2 சாமுவேல் 7: 24-29
உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர்.
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக.
உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர்.
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.
மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது நாம் என்றென்றைக்கும் கிறிஸ்துவோடு கூட நிலைத்திருந்தால் மட்டுமே தேவனுடைய வீடாக மாறுவோம். அது தான் தேவன் தங்குகிற வாசஸ்தலம். மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாம் பெற்று்கொள்ள வேண்டும் என்பதின் திருஷ்டாந்தம் தான் பிரதீஷ்டை பலிகள்
லேவியராகமம் 8: 25-28
கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,
கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி,
பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்தவாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது.
இதன் விளக்கங்கள் என்னவெனில் நாம் கர்த்தருக்காக பிரதிஷ்டித்த நாளிலிருந்து ஏழு நாட்கள் தொடர்ந்து நம்முடைய சகல அவயவங்களையும் உலக இன்பங்களிலிருந்து விடுதலையாக்கி பிரதிஷ்டிக்க வேண்டும். அவ்விதமாக நம்முடைய இரட்சிப்பை புதிதாக்கி அனுதினம் பரிசுத்தப்படுத்த வேண்டும். இப்படியாக புதிய உடன்படிக்கையாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமும், மாம்சத்திற்காக அப்பமும் புசிக்க வேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு திருஷ்டாந்தப்படுத்திய வசனம் தான்
லேவியராகமம் 8: 31-36
பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,
பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழு நாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.
இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.
கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.
அதென்னவெனில் நாம் தேவனுக்காக பிரதிஷ்டிக்கப்பட்டபின்பு ஏழு நாட்கள் நிறைவேறும் வரையிலும் ஆசரிப்புக்கூடார வாசலை விட்டு புறப்படாதபடி இருக்கவேண்டும் என்றும், அப்பொழுது ஏழு நாளளவும் பிரதிஷ்டிக்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆனால் நம்மில் அநேகர் அவ்விதம் பின்பற்றாமல் ஏனோதானோ என்று நடந்து நாம் பரிசுத்தத்தை விட்டு விலகி, இரட்சிப்பின் வஸ்திரத்தை அழுக்காக்கி கொள்கிறோம். அதனால் நம்முடைய வாழ்வில் தேவ சமாதானத்தை இழந்து நித்திய அக்கினியில் கிடந்து விருத்தசேதனம் இல்லாதவர்களை போல நாமும் வேதனை அனுபவிக்கிறோம்.
ஆதலால் பிரியமானவர்களே இனிமேலாவது தேவ சத்தத்திற்கு கீழ்படிந்து நம்முடைய குற்றங்களை அறிக்கை செய்து உடைக்கப்பட்ட உள்ளத்தோடு ஒப்புக்கொடுத்து ஏழு நாள் நாம் ஒவ்வொருவரும் தேவப்பாதத்தில் அமருவோம். அப்படியானால் நாம் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற்றுக் கொள்வோம். நம்முடைய ஆத்துமா சாகாதபடி நாம் காத்து கொள்ள வேண்டும். அதை தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்
யோவான் 6: 53-58
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
இவ்விதமாக கரத்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் நமக்கு புசிக்க தந்து நம்மை சாகாதபடி என்றன்றைக்கும் அவரோடு கூட பிழைத்திருக்கும்படியாக செய்கிறார். யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.