தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 3: 4

நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை மகிமையின் ஆலயமாக விளங்குதல் - திருஷ்டாந்தத்தோடு விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சாகாமல் பிழைத்திருக்க நாம் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதனை கர்த்தர் இஸ்ரவேல் சபையும், அதில் கர்த்தருடைய வேலை செய்கிற ஆசாரியத்துவத்திற்காக அபிஷேகம் பெற்றவர் எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தியானித்தோம்.  அதில் கர்த்தருக்காக தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்கள் யாராக இருந்தாலும்  தங்களை அர்ப்பணித்தவர்கள், தங்களை தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்துவிட்டு தங்கள் மனம்போன போக்கில் வாழ்ந்தால், அது தேவனுக்கு பிரியமில்லாதகாரியம். 

அதனால் தேவனுக்காக ஒப்புக்கொடுத்து பின்பு  ஏழு நாள் ஆசரிப்புக்கூடார வாசலை (கிறிஸ்துவின் பாதம்) விட்டு வெளியே புறப்படாதபடி, ஏழு நாளும் பிரதிஷ்டை படுத்தப்படவேண்டும்.   இவ்வளவு காரியங்களும் நாம் ஒவ்வொருவரும் பயத்தோடும் பக்தியோடும் செய்தபிறகு 

லேவியராகமம் 9:1- 4

எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,

ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.

மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் மோசே ஆரோனையும், அவன் குமாரரையும், இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து சொன்னது, என்னவென்றால் ஆசாரியத்துவம் செய்கிறவர்களும், இஸ்ரவேலில் அனுபவம் உள்ளவர்களும் தங்கள் வாழ்க்கையில்  பாவத்திலிருந்து கழுவி சுத்திகரிக்கபட்டு வெளியே புறப்படாதபடி, ஏழு நாளும் பிரதிஷ்டை படுத்தப்படவேண்டும் வேண்டும் என்றும், நம்முடைய சமாதான பலிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பது நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் உபதேசத்தால் பெலனடைந்து,  அதனை அறுவடைக்காக ஒப்புக்கொடுக்கும்படியாக கொண்டு வரும்படியாக சொல்கிறார்.  அவ்விதம் நாம் செய்யும் போது கர்த்தர் நமக்கு தரிசனமாவார் என்று சொல்லப்படுகிறது. 

என்னவெனறால் பழைய ஏற்பாட்டு பகுதியை நாம் தியானிக்கும் போது அவர்கள் கர்த்தரை தரிசிக்க வில்லை. விசுவாசித்து நடந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நாம் அவரை தரிசிப்போம் என்பதை  மோசே மூலம் தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.  என்னவெனில் 

எபிரெயர் 11:13,14  

இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது, தங்களை  அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.  அதிலும் அவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.  ஆனால் நாமோ அப்படியல்ல சுயதேசத்தை (கிறிஸ்துவை) இப்பொழுதே அடைந்து விடுகிறோம். ஆனால் பழைய பரிசுத்தவான்கள் இயேசு கிறிஸ்து தம்முடைய ஆவியை விடும் போது, அவர்களுடைய சரீரங்கள் எழுந்திருந்தது. ஆனால் கிறிஸ்து உயிர்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டு புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்கு காணப்பட்டார்கள் என்று வேதவசனம் சொல்கிறது.   இதனை நாம் பார்க்கும் போது நாம் எவ்வளவோ பாக்கியவான்கள்.   ஏனென்றால் இப்பொழுது மனுஷ குமாரனாகிய கிறிஸ்துவின் சத்தம் எப்பொழுதும் கேட்கிறோம். கேட்டு கீழ்படிந்து நம்மை ஒப்புக்கொடுக்கும் போதே உள்ளான சரீரம் உயிர்பெற்று எழுந்திருக்கிறது.  

மேலும் நம்முடைய ஆத்துமா இப்பொழுதே நித்திய ஜீவனை அடைகிறது. ஆகையால் தான் 

எபேசியர் 2:19-22 

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் புரிய வருகிறது என்னவெனில் நாம் இனி அந்நியரும், பரதேசிகளும் இல்லை என்பதும் பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் ஒரே வீட்டாரும் என்பதும். நம்முடைய அஸ்திபாரத்தின் மூலைக்கல் இயேசு கிறிஸ்து அவரோடே மாளிகையாய் எல்லா பரிசுத்தவான்களையும் இணைத்து பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. அவர்மேல் நாமும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்.  

இவ்விதமாக நாம் அவரை தரிசிக்கிறோம். இவற்றின் திருஷ்டாந்தம் தான் 

லேவியராகமம் 9: 5,6  

மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.

இவற்றில் நாம் வாசிக்கிற கர்த்தருடைய மகிமை தான் கிறிஸ்து. அவர்தான் மகிமையின் ஆலயம், நாமே அவ்வாலயம். நாம் யாவரும் மகிமையின் ஆலயமாக மாறும் படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.