தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியேல் 44: 23

அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலுயா.

மணவாட்டி சபை அந்நிய அக்கினியால் அழிந்துப்போகாதபடி  பாதுகாத்தல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருடைய சந்நிதியில் ஆரோனின் குமாரராகிய அபியூவும், நாதாபும் தன்தன் தூபகலசத்தில் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியையும், தூப வர்க்கத்தையும் போட்டுக் கொண்டு வந்தார்கள்.  அப்பொழுது கர்த்தரின் சந்நதியிலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களை பட்சித்தது; அவர்கள் கர்த்தரின் சந்நிதியில் செத்தார்கள் என்று தியானித்தோம்.  என்னவென்றால்  துர்உபதேசத்தால் நிறைந்தவர்களாகி, உலக இன்பங்களில் மூழ்கி, தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளாதபடி, தங்கள் விருப்பம் போல் வாழ்ந்துக்கொண்டு தேவ சபைகளிலும், தேவாலயங்களிலும்,சபைகூடுகிற எவ்விடத்திலும், நம்முடைய வீடுகளிலும் வந்து உபதேசிக்கிற அநேக கர்த்தரின் ஊழியகாரர்களும்,  உபதேசன்மார்களும்,  உபதேசித்தும், ஜெபித்தும்  போகிறதினால் அநேகர் தங்கள் ஆத்துமாவில் விடுதலை இல்லாமல் நரக பாதாளத்தில் கிடந்து வேதனை அனுபவித்து செத்துப் போகிறதை  பார்க்கமுடிகிறது.  

ஆதலால் பிரியமானவர்களே, தேவ கட்டளைகளை கைக்கொள்ளாத யாரையும் நாம் நம்முடைய வீடுகளிலோ, தேவனுடைய சபைகளிலோ, உபதேசிப்பதற்கோ, ஜெபிப்பதற்கோ, அனுமதிக்கக்கூடாது, அவர்களை தான் கர்த்தர் அந்நிய அக்கினி என்கிறார்.  இதனை வாசிக்கிற யாவரும் கவனத்தில் வைத்தால் நம்முடைய வாழ்வின் எல்லா பகுதிகளிலும் ஆசீர்வாதமாக இருக்க முடியும்.  

ஏனென்றால் 2 யோவான் 1: 8-11

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நாம் நன்றாக நிதானமாய் தியானித்து, எந்த துர்கிரியைகளுக்கும் பங்கு கொள்ளாதபடி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  அந்நிய அக்கினி கொண்டு வந்தவர்கள் கர்த்தரின் சந்நிதியில்  செத்ததால், மோசே ஆரோனை நோக்கி சொல்கிறது என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கு முன்பாக மகிமைபடுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்.  

பின்பு மோசே ஆரோனின் இளைய தகப்பனாகிய ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும், எல்சாபானையும் அழைத்து, நீங்கள் பாளயத்துக்கு புறம்பே, பரிசுத்த ஸ்தலத்தினின்று எடுத்து கொண்டு போங்கள் என்று சொல்லவும்  அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்து பாளயத்திற்கு புறம்பே கொண்டு போனார்கள். இதலிருந்து நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால் அந்நிய உபதேசங்களாகிய  அந்நிய அக்கினியால் நாம் கர்த்தரின் சந்நிதியில் ஜெபித்தாலோ, உபதேசித்தாலோ கர்த்தரின் அக்கினி நம் ஆத்துமாவை சாகடிக்கும். மற்றும் நாம் சபைக்கு புறம்பே தள்ளப்படுவோம்.  இதற்காக தான் மேற்க்கூறிய காரியங்கள் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  

லேவியராகமம் 10: 6-10

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.

கர்த்தர் ஆரோனை நோக்கி:

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும்,

மேற்க்கூறிய வசனங்கள் என்னசொல்கிறது என்னவென்றால், நம்முடைய ஆத்துமா சாகாதபடியும், சபையனைத்தின் மேலும் கடும் கோபம் வராதபடிக்கும், நமக்கு தேவன் தந்த இரட்சிப்பை இழந்து விடாதபடிக்கு, கர்த்தர் நமக்கு தந்த அபிஷேகத்தை அழித்துப்போடாதபடிக்கு  அந்நிய உபதேசங்கள் நம்மளில் நுழையாதபடி  நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

என்னவென்றால் கர்த்தரிடத்திலிருந்து நாம் இரட்சிப்பின் வஸ்திரத்தை பெற்றுக்கொண்டு, நாம் அந்நிய அக்கினியில்  விழுந்து அழிந்துப் போகாதபடிக்கு, பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும் வித்தியாசத்தை நாம் அறிந்துணர்ந்து, தீட்டினாலும், பரிசுத்தமில்லாததினாலும்  நம் ஆத்துமாவை கெடுத்துக்கொள்ளாதபடி, சகல பிரமாணங்களை கைக்கொண்டு நடந்து, தேவ சித்தம்  செய்து தேவ ஆசீர்வாதம் பெற்றுகொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.